இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
இன்று வாழ்வில் மகிழ்ச்சியை பெருக்கும் ஆடிப்பெருக்கு வீட்டிலிருந்து கொண்டாடுவது எப்படி?
இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே போல திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெருகவும், திருமணமாகாத பெண்கள் மனதிற்கு பிடித்த கணவரை மணக்கவும் காவிரித்தாயை வழிபடலாம்.
இன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.
வீட்டில் இருந்து ஆடி 18 கொண்டாடுவோம்
வீட்டில் பூஜை செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
ஒரு தாம்பாலத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு என்று பெண்கள் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைக்க வேண்டும்.
பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், சூரிய பகவானையும் வணங்க வேண்டும்.
வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.
திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இப்போது உள்ள காலக்கட்டத்தில் கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல முடியாது. புனித நதிக்கரைகளுக்குச் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் ஒரு சொம்பில் தூய்மையான தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் போட்டு நிவேதனம் வைத்து, ஏழு புனித நதிகளின் பெயரை கூறி வணங்கினால் போதுமானது.
அதோடு இந்த நாளில் மகாலட்சுமி மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதாக ஐதீகம். ஆகையால் குபேரனையும், மஹாலட்சுமியையும் இந்த நன்னாளில் வணங்குவதால் குறைவற்ற செல்வம் வீட்டில் நிலைக்கும்.
அறிவியலும், முன்னோர்களின் வைத்தியமும்
அறிவியல் ரீதியாக பார்ப்போமானால் மஞ்சள் என்பது கிருமிநாசினி ஆகும். மஞ்சள் தடவிய கயிற்றை ஆடிப்பெருக்கு அன்று மாற்றிக் கொள்வதன் மூலம் கிரகங்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மற்றும் கிருமிநாசினியாக செயல்படும் மஞ்சள், பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான ஆரோக்கியம் சார்ந்த இன்னல்களில் இருந்து காக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.
மேலும், அன்றைய தினத்தில் உறவினர்களுடன் கூடியிருக்கும் சூழலில் அவர்களின் மனமும் மகிழ்ச்சியான சூழலில் இருப்பதினால் கிருமிநாசினியும், அவர்களுடன் இணைந்து அவர்களை பாதுகாக்கும் அரணாக செயல்பட துவங்குகின்றது.
இதுவே ஆடிப்பெருக்கு அன்று மாங்கல்ய கயிறு மாற்றுவதன் ரகசியம் ஆகும். ஆகவே சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் யாவரும் இந்நாளை தவறவிட வேண்டாம். ஏனெனில் சமயமும், ஆரோக்கியமும் சார்ந்து நமது முன்னோர்கள் சொன்ன வைத்திய முறை இதுவாகும்.