மாரிக்காலம் கழிந்து வரும் மாதம் என்பதால் ‘மார்கழி’ என்ற பெயரோடு உண்டான மாதம் இது. ஜோதிட அடிப்படையில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் உலாவும் காலத்தில் வரும் மாதம் என்பதால் அந்த நட்சத்திரப் பெயரால் ‘மார்க்கசிர’ என்று உருவாகி மார்கழி என்றானது என்றும் கூறுவார்கள். ஜோதிட வல்லுநர்கள் இந்த மாதத்தை ‘தனுர்’ மாதம் என்பார்கள். சைவர்கள் இம்மாதத்தை ‘தேவர்களின் மாதம்’ என்று போற்றி பெருமை கொள்வார்கள். வைணவர்களுக்கோ மார்கழி பீடுடைய, அதாவது பெருமைக்கு உரிய மாதம். கண்ணபரமாத்மாவே ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று சொன்ன மாதம் அல்லவா? திருப்பாவையும், திருவெம்பாவையும் தோன்றிய தெய்விக மாதமும் இதுதான்.
ஆண்டவனைத் தொழுவதற்கென்றே உருவான மாதம் இது என்பதால் இந்த மாதத்தில் மங்கள காரியங்கள் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை. பனிபொழியும் விடியற்காலையில் சிவன் கோயில்களில் திருவெம்பாவையும், திருமால் ஆலயங்களில் திருப்பாவையும் ஒலிக்கும் அற்புத மாதம் இது. வாசல்தோறும் அழகியக் கோலங்களும், வீதிதோறும் பக்திப்பாடல்களும் ஒலிக்கும் உன்னத மாதம் இது. சாணத்தில் பூசணிப்பூவை செருகி வைத்து வழிபாடாகவும், வைத்தியமுறை யாகவும் தமிழர்கள் வாழும் சிறப்பான மாதம் இது. சூரிய உதயத்துக்கு முன்பாக வரும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் வீசும் காற்று உடலுக்குப் பல நன்மைகளைச் செய்யக்கூடியது என்பதாலேயே அந்த வேளையில் எழுந்து கோலமிட்டு, நீராடி, கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
மார்கழியின் புராண சிறப்புக்கள்
மார்க்கண்டேய புராணம், இந்த மாதத்தை ‘மரணத்தை வெல்லும் மார்கழி’ என்று போற்றுகிறது. ஆம், இந்த மாதத்தில்தான் மார்க்கண்டேயர் சிவபெருமானை வணங்கி மரணத்தில் இருந்து தப்பி, நித்ய வாழ்வைப் பெற்றார். அழகிய தமிழால் அரங்கனை ஆண்ட ஆண்டாள், விரதமிருந்த புண்ணிய காலம் இது. ஹனுமன் பிறந்த மாதம் இது. சொர்க்க வாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் மாதமும் மார்கழி தான். இந்த மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆடல்வல்லான் சிவபெருமானின் திருவாதிரைத் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. பாவை நோன்பும், திருவெம்பாவை நோன்பும் நோற்கப்படும் காலமும் மார்கழியில்தான். விநாயகர் சஷ்டி விரதம், திருத்தணிகை கோயிலில் படிஉற்சவ விழா ஆகிய விசேஷங்களும் இந்த மாதத்தை பெருமை கொள்ளச் செய்கின்றன.
வெற்றியின் அதிபதி என்று போற்றப்படும் சூரிய பகவான், யோகநிலையில் இருக்கும் காலம் என்பதாலும், அந்தக் காலத்தில் உயிர்க்கொலை கூடாது என்பதாலும் அந்தக் கால மன்னர்கள் இந்த மாதத்தில் போர் செய்யமாட்டார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது. இம்மாத அதிகாலையும், அந்திப்பொழுதும் இறைவனுக்காகவே ஒதுக்க வேண்டும். இந்த மாதத்தில் செய்யப்படும் பூஜைகளும், விரதங்களும் கோடி மடங்கு பலனைத் தரும் என்று ஆன்மிகப்பெரியவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்தில்தான் மகாபாரதப் போர் நடைபெற்றது என்றும், அதன் தாக்கமாகவே அந்தக் காலத்தில் போர்கள் செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
பாற்கடல் கடையப்பட்டதும், ஆலகால விஷம் வந்ததும், அமுதம் பெற்றதும் இந்த மாதத்தில் தான். இந்திரனின் கோபத்தால் பெருமழை பெய்து கோகுல மக்கள் இன்னல் அடைந்தபோது, கண்ணன் கோவர்த்தனகிரியைத் தூக்கி மக்களை பாதுகாத்ததும் இந்த மாதத்தில் தான். திறக்கப்படாத கோயிலையும் திறக்கச் செய்து பக்திமணம் கமழச் செய்யும் மாதம் இது. மலர்களும், கனிகளும் மலிந்து கிடைக்கும் இயற்கைக்கு இணக்கமான மாதமும் இதுவே. இவையெல்லாம் போதாது என்று இன்னொரு சிறப்பும் இம்மதத்திற்கு உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் கிருஷ்ணபரமாத்மாவின் ஒவ்வொரு பெயரையும் சொல்லி அழைக்கிறது வேதம். அந்த வகையில் மார்கழிக்கான பெயர் “கேசவன்” கண்ணனின் நாமாவளிகளில் உன்னதமான சிறப்பினைக் கொண்ட பெயர் கேசவன். அழகிய கூந்தலைக்கொண்டவர் என்பதாலும், கேசி என்ற அசுரனைக் கொன்றதாலும் கிருஷ்ணர் ‘கேசவன்’ எனப்போற்றப்பட்டார்.
ஆன்மிகத்தை வலியுறுத்தும் இந்த ஆனந்த மாதத்தில் வாயிலார் நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார் என நாயன்மார்களும், ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வாரும் தோன்றி பெருமை கொண்டார்கள். ரமண மகரிஷி, பாம்பன் சுவாமிகள், அன்னை சாரதா தேவியார் போன்ற ஞானியர்கள் தோன்றிய மாதமும் இதுவே. ‘மாதாவை வணங்காத சிசுவும், மார்கழியில் இறைவனை வணங்காத ஜீவனும் வீண்’ என்பார்கள். இந்த அற்புதமான மாதத்தில் ஆண்டவனை மனமார துதித்து மகிழ்ச்சியான வாழ்வினை மேற்கொள்வோம்.
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்..