இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
பொதுவாக தலைவலி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும்.
தலைவலி எல்லா தரப்பினருக்கும் வருகின்ற ஒரு பொதுவான நோய் என்றாலும், அதில் சிலருக்கு வரப்போகும் நோய்களுக்கு அறிகுறியாகவும் ஏற்படுவதுண்டு. தலைவலிக்கான காரணங்கள் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
தலைவலிக்கான காரணங்கள்
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருத்தல் அல்லது வேலை செய்தல் போன்றவற்றால் தலைவலி ஏற்படுகின்றது.
மேலும் மழை மற்றும் பனிக்காலங்களில் தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்தல், தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகின்றது.
தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகிய காரணங்களாலும் வருகிறது.
பெண்களிடையே மாதவிலக்கு காலங்களில் தலைவலி வருகிறது.
ஒற்றை தலைவலி (மைக்ரேன்) என்பது பரம்பரையாக வரக்கூடும். பெற்றோரில் ஒருவருக்கு தலைவலி (மைக்ரேன்) இருந்தால், குழந்தைக்கு வரும் வாய்ப்பு 50 சதவீதம் மற்றும் இருவருக்கும் இருந்தால் வரும் வாய்ப்பு 75 சதவீதம் உள்ளது.
சுவாசிக்கும் காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் தலைவலி ஏற்படும். அதோடு நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள், ரத்த சோகை, இதயத் துடிப்பில் ஒழுங்கின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அது அதிக அழுத்தம் காரணமாக வெடித்து ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது திடீரென அவருக்கு மண்டையைப் பிளப்பது போல் தலைவலி ஏற்படுகிறது.
தலையில் சாதாரண காயம் ஏற்பட்டு அடிப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நினைவிழப்பு ஏற்பட்டிருந்தாலும் தலைவலி வரும் வாய்ப்பு உண்டு.
தீர்வுகள்
மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர், தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு சுக்குக் காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளித்த பிறகு தலையை காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்க வேண்டும். தலைவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு சளித்தொல்லையும் கண்டிப்பாக இருக்கும் என்பதால் அதை முதலில் விரட்ட முயற்சிக்க வேண்டும்.
தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் முதலில் சைனஸ் பிரச்சனை இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஐஸ் ஒத்தடம், இளஞ்சூடான நீரில் குளித்தல், சரியான நேர நிர்வாகம், அக்குபஞ்சர், சுவாசப்பயிற்சி, மசாஜ், ரிலாக்சேஷன் பயிற்சிகள் போன்றவையும் உதவும்.
திட்டமிட்ட, அமைதியான நிலையுடன் கூடிய வாழ்க்கை தலைவலிகளை நெருங்கவிடாது.
அதீத தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும்.