இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
வியாழக்கிழமை விரதம் எப்படி இருக்க வேண்டும்?
குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் வியாழக்கிழமை விரதம் இந்த விரதத்தை 3 ஆண்டுகள் சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
எந்த வியாழக்கிழமை விரதமிருக்க வேண்டும்? எத்தனை நாட்கள் விரதமிருக்க வேண்டும்? எப்படி விரதம் இருக்க வேண்டும்? அப்படி இருந்தால் வேறு எந்தெந்த பயன்கள் கிடைக்கும்? என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்…!!
பொதுவாக வியாழக்கிழமை என்றாலே அது குருபகவானுக்கு உகந்த நாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை விரதத்தை சுக்கிலபட்சம் என சொல்லப்படும் வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளலாம். இந்த வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும்.
அன்றைய தினத்தில் காலை எழுந்தவுடன் தலைக்கு குளித்து, மஞ்சள் நிற ஆடையை அணிந்து, எதையும் அருந்தாமல் அருகே உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று குருபகவானை வழிபட வேண்டும்.
குருபகவானுக்கு மஞ்சள் நிறப்பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை வைத்து நைவேத்தியம் செய்து, சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குருபகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
முக்கியமாக இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அன்றைய தினத்தில் உணவு எதுவும் உண்ணக் கூடாது. மேலும் அன்றைய நாள் முழுவதும் குருபகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபடுவது மிகவும் சிறந்தது.
அதே போன்று அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.
இவ்வாறு மூன்று வருடங்கள் வளர்பிறை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வந்தால் வாழ்வில் குருபகவானின் அருள் என்றென்றும் இருக்கும். பல யோகங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
குறிப்பாக திருமண தடை நீங்கும். ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகதோஷம் எதுவாக இருந்தாலும் கழிந்துவிடும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இது போன்று பல நன்மைகளை இவ்விரதத்தின் மூலம் பெற முடியும்.
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.