இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
வருகிறது விநாயகர் சதுர்த்தி வழிபட தயாராகிவிட்டீர்களா?
வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை எதுவும் நெருங்காது.
முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.
ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் தேதி செப்டம்பர் 10ஆம் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாளில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றது.
இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றது. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் 10 நாட்கள் வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜையறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடலாம் வாங்க
ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டிய சூழ்நிலை நிலவி உள்ளது. கடவுள் வழிபாடு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது உடல் ஆரோக்கியமும் அவசியம்.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சமூக தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு எளிமையாக கொண்டாடப்பட உள்ளது.
நாட்டையும், மக்களையும் காக்க இந்த ஆண்டு நாம் எளிமையாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வணங்குவோம்.