அன்று இருந்தது.. இன்று இல்லை.. காலத்துடன் இவர்களையும் மறந்துவிட்டோம்..!!
காணாமல் போனவைகள்..! மனதில் நிற்கும் நினைவலைகள்..!
நாம் அன்று பார்த்து ரசித்த பொருட்களெல்லாம், இன்றைய நவீன உலகத்தில் காண்பதற்கே அரிதாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
விஞ்ஞானமும், நாகரிகமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வரும் காலம்தான் இது. நாமும் அதனுடன் ஓடித்தான் ஆக வேண்டும்.அந்த வகையில் நாம் சிறுவயதில் கண்டு அனுபவித்தவைகளை பற்றி பார்க்கலாம்…
பூம் பூம் மாடு :
பூம் பூம் மாடு எல்லாம் நாம் சிறு வயதில் பார்த்து இருப்போம். இது தெருக்குள்ளே வந்தாலே போதும் நாம் எல்லோரும் பின்னாடி ஓடிப்போயிடுவோம். பல பல வண்ண கலர்களில் துணிகளால் மாடுகளை அலங்கரித்து உடுக்கை ஒலியுடன் வருவார் பூம் பூம் மாடுக்காரர். இந்த சத்தத்;தை கேட்டாலே மாடு தலையை ஆட்டும். இதனை வேடிக்கைப் பார்ப்பதற்காக சிறுவர்கள் ஓடிச் செல்வார்கள்.
மாட்டு வண்டி :
இன்றைய காலக்கட்டத்தில் மாட்டு வண்டியை பார்ப்பதே அரிதான விஷயம். இதில் பயணம் செய்வதே ஒரு தனி சுகம்தான். அதுவும் மாட்டின் கழுத்தில் இருக்கும் சலங்கையின் ஜல் ஜல் ஒலியின் சத்தத்தையும், பின்னாடி இருக்கும் கூடாரத்தில் படுத்துக்கொண்டு வலது, இடது புறமாக ஆடிக்கொண்டே பயணிப்பதும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.
அம்மி கொத்துபவர் :
அன்றைய காலங்களில் தெருக்களில் அம்மி கொத்துபவர்கள் ‘அம்மி கொத்தலையோ” என்று கூவிக்கொண்டு போவார்கள். அதுவும் நம் விருப்பத்திற்கேற்ப கலைநயத்துடன் அழகான வடிவங்களில் அம்மி கொத்துவதே தனி அழகு தான். இப்போதெல்லாம் அம்மி கொத்துபவர் மட்டுமல்ல.. அம்மியே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
குடுகுடுப்புக்காரர் :
‘நல்ல காலம் பொறக்குது… நல்ல காலம் பொறக்குது” என்று கூவிக்கொண்டே, உடுக்கையை ஆட்டிக்கொண்டே இரவு நேரங்களில்தான் குடுகுடுப்புக்காரர் வருவார். நாம் இவரை ஒளிந்திருந்து தான் அதிகமாக பார்த்திருப்போம். குடுகுடுப்புக்காரைப் பார்த்தாலே சிறுவர்கள் பயந்து ஓடுவதுதான் நம் ஞாபகத்திற்கு வரும்.
-படித்தேன் பகிர்ந்தேன்-
image source :https://www.youtube.com/watch?v=OrJ8wKn61IU