தமிழர்களான நமக்கெல்லாம் சோழன் என்றாலோ தமிழர்கள் என்றாலோ முதலில் நினைவில் வருவது இராஜ இராஜ சோழனையும், அவர்களது வம்சத்தையும் மட்டும்தான். உண்மையில், அவர்களெல்லாம் விஜயாலய சோழனின் வீரத்தால் மீளத் தொடங்கப்பட்ட ஆட்சியின் பின்வந்த இடைக்கால மன்னர்களே. அதற்கு முன்பிருந்தே அதாவது கி.மு காலப்பகுதியிலிருந்தே சோழர் என்றால் குலை நடுங்கும் வீரத்தை வெளிப்படுத்தி வந்த மன்னர்கள் சிலர் இருக்கின்றனர்.
அவர்களில், எல்லோரும் அறிந்த பெயர் கரிகால் சோழன். ஆனால், மறக்கப்பட்ட மற்றும் இலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட மன்னன், பேரரசன் மற்றும் பெரும் வீரனான எல்லாளன். தள்ளாடும் வயதுகளிலும் இளம் துட்டகைமுனுவை எதிர்த்துப் போராடி அவனது படையை சிதைத்த பின் தனிப்போரில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட மாபெரும் மன்னன்.
எல்லாளன்
எல்லாளன் மகாவம்சத்தில் “உன்னதமான வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தமிழன். சோழ நாட்டிலிருந்து வந்தவர்” என்று விவரிக்கப்படுகிறார்; அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. பொ.ச.மு. 205 இல், எல்லாளன் வடக்கு இலங்கையின் அனுராதபுராவை தளமாகக் கொண்ட ராஜரதத்தின் மீது படையெடுத்து, அனுராதபுர மன்னர் அசேலவின் படைகளைத் தோற்கடித்து, தன்னை ராஜரதத்தின் ஒரே ஆட்சியாளராக நிலைநிறுத்திக் கொண்டார்.
அவர் சிலப்பதிகாரம் மற்றும் பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரது பெயர் தமிழ் இலக்கியத்தில் நேர்மை மற்றும் நீதிக்கான ஒரு உருவகமாகப் பயன்படுத்தப்பட்டது. அவரது தலைநகரம் திருவாரூர்.ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் எனச் சொல்கின்றனர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.எனினும் இது குறித்துத் தெளிவான முடிவு எடுப்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.
புஸ்பரட்ணம், ப., இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி – ஒரு நோக்கு. நா.கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3, பக்கம் – 5.
மகாவம்சம் கூறுகின்ற ஒரு கதை எல்லாளன் பெளத்த மதத்தை ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தான் என்பதையும் நிரூபிக்கின்றது. தன் தாய் மரணித்ததை அறிந்த எல்லாளன் தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. மன்னன் தேரினின்றும் கீழே குதித்து, தனது தலையை உடனடியாகச் சீவிவிடுமாறு, அமைச்சர்களிடம் கூறினான். ‘தெரியாமல் நிகழ்ந்தது அமைதியடைக. தூபத்தைத் திருத்தி விடுவோம்’ என்றனர் அமைச்சர்கள். பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க எல்லாளன் பதினையாயிரம் கஹாப் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தான். மகாவம்சம், மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 21 – 26
எனினும் இதே விடயம் இனவெறியை தூண்டுவதற்காக விகாரமகாதேவியால் பயன்படுத்தப்படுவதையும் மகாவம்சம் நியாயப்படுத்தி கூறுகின்றது. அதில் விகாரமகாதேவி தன் மகன் துட்டகாமினியிடம் ‘எல்லாளன் அங்கு (அநுராதபுரத்தில்) பெளத்தவிகாரைகளை தேரால் இடித்து தரைமட்டமாக்கிறான்’ என கூறுவதாக கூறப்பட்டுள்ளது. இவள் திருமணத்தின் பின் குழந்தை வயிற்றோடு தன் கணவனிடம் கேட்ட ஆசைகள் 3 என மகாவம்சம் சொல்வதாக விக்கிப்பீடியாவில் உள்ளது.
- பிக்குகளுக்கு வழங்கித்தானும் பருகக்கூடிய பெரிய தேன் அடை
- எல்லாளனின் படைத்தளபதி ஒருவனின் தலையைச்சீவிய இரத்தம் தோய்ந்த வாளினைக்கழுவிய நீரை அருந்த வேண்டும்
- அநுராதபுரத்தின் வாடாத தாமரைகளால் மாலை கட்டி அணிய வேண்டும்
இப்படிப்பட்ட ஒரு பின்னனியில் ஏற்கனவே எல்லாளன் ஆட்சி மறைக்கப்பட்டிருப்பது போதாதென்று மகாவம்சத்தில் அவனை பற்றிக் குறிப்பிடும் கருத்துக்கள் யாவும் மனு நீதி சோழனுடைய கதைகளை ஒத்து இருக்கின்றன. வாசலில் ஆராய்ச்சி மணி கட்டித் தொங்கவிடப்பட்து அதன் மூலம் தேவை வேண்டுவோருக்கு நிறைவேற்றிக்கொடுக்கும் கதையும், தனது மகன் கன்றைக் கொன்றதால் தன் மகனையே பலியிட்டு நீதி கொடுத்தகதையும் எல்லாளனின் கதை எனப்படுகிறது.
வீரனின் வீழ்ச்சி
மகாவம்சம், மோதல்களின் போது நடந்த முற்றுகைகள் மற்றும் போர்கள் பற்றிய விரிவான விவரங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக சுவாரஸ்யமானவையாக போர் யானைகளின் விரிவான பயன்பாடு மற்றும் போர்களில் எரி தாக்குதல்ப் பயன்பாடு பற்றி சொல்கிறது. எல்லாளனின் சொந்த போர் யானை மஹா பப்பா, அல்லது ‘பெரும் பாறை’ என்றும், துட்டகைமுனுவின் சொந்த யானை ‘கந்துலா’ என்றும் கூறப்படுகிறது.
துட்டகைமுனு அனுராதபுரத்தை நெருங்கியபோது இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. முந்தைய இரவில், எல்லாள மன்னர் மற்றும் இளவரசர் துட்டகைமுனு இருவரும் தங்கள் ஆலோசகர்களுடன் கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. அடுத்த நாள் இரு ராஜாக்களும் போர் யானைகளின் மீது முன்னோக்கிச் சென்றனர. எல்லாளன் “முழு கவசத்துடன் ரதங்கள், வீரர்கள் மற்றும் மிருகங்களுடன் புறப்பட்டான்” என்கிறது. துட்டகைமுனுவின் படைகள் எல்லாளனின் படைகளைத் திசைதிருப்பியதாகவும், “அங்குள்ள தொட்டியில் உள்ள நீர் கொல்லப்பட்டவர்களின் இரத்தத்தால் சாயம் பூசப்பட்டதாகவும்” கூறப்படுகிறது. துட்டகைமுனு, ‘எல்லாளனை என்னைத் தவிர யாரும் கொல்லக் கூடாது’ என்று அறிவித்து, தெற்கு வாசலில் அவரை மூடியதாகவும் அனுராதபுரத்தில், இருவரும் யானை சண்டையில் ஈடுபட்டனர் எனவும் வயதான ராஜா இறுதியாக துட்டகைமுனுவின் ஈட்டிகளில் ஒன்றால் சாய்க்கப்பட்டதாகவும் சொல்கிறது. ஆனால், இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பது தொடர்பாக பலருக்கு நம்பிக்கையில்லை. சதிகள் தொடர்பான சரியான விளக்கமும் இல்லை.
தமிழர் பெருமை சொல்லும் அரிய வெளிநாட்டுக் கல்வெட்டுக்கள் – 1
19 ஆம் நூற்றாண்டு வரை, தக்கினா ஸ்தூபம் எல்லாலனின் கல்லறை என்று நம்பப்பட்டது.
அவரது மரணத்தைத் தொடர்ந்து, துட்டகைமுனு எல்லாளனை அவர் விழுந்த இடத்தில் தகனம் செய்யும்படி கட்டளையிட்டார். மேலும் அந்த இடத்தின் மீது ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. ‘இன்றுவரை இலங்கை இளவரசர்கள் இந்த இடத்திற்கு அருகில் வரும்போது, அவர்களின் இசையை கூட மௌனப்படுத்த மாட்டார்கள்’ என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. தக்கினா ஸ்தூபம் 19 ஆம் நூற்றாண்டு வரை எல்லாளனின் கல்லறை என்று நம்பப்பட்டு எலரா சோஹோனா என்று அழைக்கப்பட்டது, ஆனால் பின்னர் இலங்கையின் தொல்லியல் துறையால் மறுபெயரிடப்பட்டது. அடையாளம் மற்றும் மறுவகைப்படுத்தல் சர்ச்சைக்குரியதாக கருதப்படுகிறது.
வீர தமிழர் வரலாறுகள் மறைக்கப்படுவதில் வெளி உலகுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு உலகம்வாழ் தமிழர்களாகிய நமக்கும் இருக்கிறது. மற்றவர்கள் மறைக்க முயலும் நேரத்திலேயே நாம் அனைத்தையும் மறந்து விடுவதால் வரலாறு இலகுவாக மாற்றியமைக்கப்படுகிறது.
இது நேராமல் தடுக்க வேண்டுமானால் தமிழர்களுக்கு தம்முடைய வரலாறு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். புலம்பெயர் தமிழ் மக்களும் இந்தக் கதைகளை அடுத்த சந்ததிகளுக்கு பரப்ப வேண்டியது அவசியம். இயன்றளவு இந்தக் கட்டுரையை மற்றவர்களுக்கு பகிருங்கள். இதில் சொல்லப்படாத ஆனால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கருத்துப்பெட்டியில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முகப்பு : பந்துல ஜயசேகர