சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு பக்தர்கள் சென்று வரலாம்.
சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.
ஐயப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.
ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்திற்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
சபரிமலை ஐயப்பன் உற்சவம் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்திற்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாதவர்கள் இந்த சமயத்தில் ஐயப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுதான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை ஐயப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்துவர 15 சங்கங்கள் உள்ளன.
ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள். ஐயப்பனை நினைத்து கடுமையான விரதமுறையை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐயப்ப பக்தர்கள் ஏன் கார்த்திகை மாதம் விரதத்தை மேற்கொள்கிறார்கள்? ஏன் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்புகிறார்கள்? ஐயப்ப பக்தர்கள் வெந்நீரில் குளிக்கக்கூடாது என்பது ஏன்? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் விரதம் இருப்பது ஏன்?
பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரிமலை யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவார்கள். இதன்படி, ஒருவர் சபரிமலைக்கு செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து, பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும். இதன்படி, ஒருவர் கார்த்திகை மாதம் முதல்நாள் மாலையிட்டால் தான், மகர ஜோதி தரிசனத்திற்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.
ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்தை உரத்த குரலில் எழுப்புவது ஏன்?
ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்கப் பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும். இது வீட்டில் இருப்பவர்கள், மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால் அவர்களது கவனமும் ஐயப்பனை பற்றிய எண்ணத்தில் திரும்பும்.
ஐயப்ப பக்தர்கள் ஏன் வெந்நீரில் குளிக்கக்கூடாது?
வெளிப்புற தட்பவெப்பநிலை குளுமையாக இருக்கும் காலம் (மழை, பனி) என்பதால் குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. சபரிமலை யாத்திரை செல்ல வேண்டுமானால் உடல்நலம் சீராக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த விதிமுறை. குளிப்பதால் ஏற்படும் குளுமை உடலில் சீராக பரவ வேண்டும் என்பதற்காகவே சந்தனம் இட்டுக்கொண்டு செல்கின்றனர்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டிய ஐயப்பன் நமஸ்காரம்
ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் சுவாமியே சரணம்.