தீபாவளி இப்பொழுதே கலைக்கட்ட துவங்கிவிட்டது. தீபாவளி என்பது அனைவரது மனதிலும் புதிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
தீபாவளியன்று பூஜைகளும், வழிபாடுகளும் நமது இல்லத்தில் செய்யப்படுகின்ற மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். இதில் மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைப்பது என்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
தீபாவளியன்று சரியான முறையில் லட்சுமி தேவியை வழிபட்டால் நமது வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.
லட்சுமியின் அருளை பூரணமாக பெற சில டிப்ஸ்
வீட்டை சுத்தம் செய்தல்
தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்து துடைக்கும்போது, (குறிப்பாக உங்கள் பூஜையறையை) லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து, நமது இல்லத்திற்கு வருகை புரிவாள்.
உப்பு நீரைத் தெளிக்கவும்
பொதுவாக உப்பு கலந்த தண்ணீரால் வீட்டை சுத்தம் செய்வது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். தீபாவளி நாளில் உப்பு கலந்த நீரை வீட்டைச் சுற்றி தெளிப்பதால், காற்றிலிருந்து வரும் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் உப்பு உறிஞ்சிக் கொண்டு சுற்றுச்சூழலை சுத்திகரித்து, இல்லத்தில் நேர்மறை ஆற்றலை பரவச் செய்கிறது.
உங்கள் பிரதான கதவை திறந்து வைக்கவும்
தீபாவளி பண்டிகையின் போது வீட்டின் பிரதான கதவை (நுழைவாயில்) திறந்து வைத்திருக்க வேண்டும். இது லட்சுமி தேவியை வரவேற்பதன் அறிகுறியாகும்.
கோலம்
வீட்டு வாசலில் கோலமிடுவது வாயிலின் அழகுக்கு மட்டுமல்ல. இது நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் தரக்;கூடியது. நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வண்ணங்களான பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களை தேர்ந்தெடுத்து கோலமிடுவதால் செல்வம் மற்றும் மகாலட்சுமியை இனிதே வரவேற்க முடியும்.
பூஜைக்கான சிலைகள்
செல்வத்தை நமது வீட்டிற்கு கொண்டு வர வீட்டின் வடக்கு பகுதியில் லட்சுமி பூஜை நடத்த வேண்டும். பூஜை செய்யும்போது லட்சுமி தேவியின் சிலைக்கு இடதுபுறத்தில் விநாயகரின் சிலை கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதுபத்தி
ஊதுபத்திகள் ஏற்றி வைப்பது வீட்டை வாசனையாக வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் நேர்மறை ஆற்றலையும் இல்லத்தில் பரவச் செய்யும். தீபாவளி நாளில் வீட்டை நேர்மறையாகவும், உற்சாகமாகவும் மாற்ற நறுமணம் மிகுந்த ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும்.
மணி ஓசை
தீபாவளியன்று மட்டுமல்லாமல் எப்பொழுதும் பூஜை செய்யும் போது மணி ஓசை எழுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது இல்லத்தில் நேர்மறை ஆற்றலை பரவச் செய்யும்.
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.
மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்
- அதிகாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
- காலை 09.13 மணி முதல் 10.43 மணி வரை
- பிற்பகல் 01.13 மணி முதல் 01.28 மணி வரை
- மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
- இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை
ஒருவரது வீட்டில் செல்வம் அதிகரிக்கவும், சேர்ந்த செல்வம் குறையாமல் இருக்கவும் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பூஜை லட்சுமி குபேர பூஜை. இப்பூஜையின் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருள் மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும்.
லட்சுமி குபேர பூஜையை செய்வது மிகவும் எளிது. ஆனால் இதன் மூலம் கிடைக்கும் பலன்களோ மிக அதிகம். இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து ஒரே நாளில் செய்ய வேண்டும்.
லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை
பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை வைத்து குபேர கோலமிட வேண்டும்.
கோலத்தின் முன் கலசம் வைத்து, நிவேதனப்பொருட்கள் மற்றும் தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்திற்கு முன்பாக வைத்து வணங்க வேண்டும்.
குபேர யந்திர கோலத்தில் உள்ள கட்டத்தை குங்குமத்தாலும், எண்களை அரிசி மாவாலும் எழுதுவது சிறந்தது. திருமகளான லட்சுமியை குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ‘ஸ்ரீ” எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம்.
இதை வரைந்த பிறகு கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வைக்க வேண்டும். நாணயம் கட்டத்திலுள்ள எண்களை மறைப்பதுபோல் வைக்கக்கூடாது.
நாணயம் மகாலட்சுமியின் அடையாளம் என்பதால் குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பூஜை செய்வதற்கு உதிரிப்பூக்களை வைத்துக் கொள்ளவும்.
பூஜையை செய்திட ஒருமுறைக்கு ஒன்பது காசுகள் என, ஒன்பது தடவைக்குமாக சேர்த்து 81 நாணயங்கள் அவசியம். பிறகு செல்வம் சேர வேண்டும் என்று மகாலட்சுமியிடம் மனதார வேண்டி கொண்டு மந்திரத்தை கூற வேண்டும்.
பேராய நமஹ ‘தனபதியே நமஹ” எனும் மந்திரத்தை 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ குபேர யந்திரத்தில் வைத்த நாணயங்களை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட்டுவிட வேண்டும்.