இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வியாபாரமாகிவிட்டது.அன்பு, சமுதாய அக்கறை என எல்லாவற்றையும் சுயநலம் கருதியே செய்கின்ற உலகத்தில்தான்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இன்னும் ஏன், நம் கண் முன் ஒருவர் தவறி விழுந்தால் கூட பலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்
வாங்க ஆசைப்படுகின்றார்?
இன்னும் சிலர், மற்றவர்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே
விழுந்தவருக்கு உதவுகின்றார்கள். சிலரோ நமக்கு இப்படி நடந்தால்
யாராவது உதவவேண்டும் என்பதற்காக உதவ முன்வருகின்றனர்.
உலகம் சாதாரணமாக இருந்த காலகட்டத்திலேயே எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் உதவி செய்பவர்களை காண்பது அரிதானது. இப்போதோ
உலகம் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில்
சொல்லவா வேண்டும்!கண்ணெதிரில் ஒருவர் மயங்கி விழுந்தால் கூட ஒருவரும் உதவிக்கு செல்வதில்லை.
சமீபத்தில் ஒரு செய்தி ஒருவர் வலிப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீதியில் விழுந்து மழையில் நனைந்தபடி துடிப்பதை சிலர் வேடிக்கை பார்ப்பது போன்ற வீடியோவை நிறைய ஊடகங்களில் செய்தியாக வந்திருந்தது, இதனை வீடியோ எடுத்து வெளியிட்டவர் கூட அவருக்கு உதவ முயற்சிக்கவில்லை என்பது இவ்வுலகில் மனிதம் அருகிவிட்டது என்பதற்கு சான்றாக அமைகிறது.இன்றைய யதார்த்தம் இதுதான்.
அதிகளவான பெரிய வீடுகள் ஆனால், மிக சிறிய குடும்பங்கள் உயர்தரம் வாய்ந்த கல்வி. ஓரளவு திருப்திபடும் அளவுக்கு கற்றுள்ளோம்.ஆனால், இயல்பான அறிவு மிக குறைவு. வெளிநாடுகளில் பட்டம் பெற்ற மருத்துவர்கள் ஆனால், மிக மோசமான சுகாதார பழக்கங்கள்.
நிலவை தொட்டுவிட்டோம்.வேற்று கிரகத்தில் மனிதர்கள்இருக்கின்றார்களா? வேற்று கிரகவாசிகள் எப்படி பயணிக்கிறார்கள்? எந்த கிரகத்தில் மனிதர்கள்
வாழக்கூடிய வளங்கள் இருக்கின்றது?என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்கின்றோம். ஆனால், அயலவர் கூட நமக்கு அறிமுகம் இல்லை.
- கூடிய வருமானம். ஆனால்,மனநிறைவு குறைவு.
- உயர்ந்த நுண்ணறிவு. ஆனால் அருகிப்போன உணர்வுகள்.
- விலையுயர்ந்த கடிகாரங்கள் ஆனால், யாருக்கும் உறவுகளுடன் கதைக்க கூட நேரம் இல்லை.
- அதிக எண்ணிக்கையிலான உறவுகள் ஆனாலும், உண்மையான அன்பு எவரிடமும் இல்லை.
- முகநூலில் ஐயாயிரம் நண்பர்கள் ஆனால்,நிஜ வாழ்க்கையில் யாருமற்ற தனிமை.
- இலத்திரனியல் உபகரணங்களுடன் பேசி பேசி மனிதர்களுடன் பேசுவதையே மறந்துவிட்டோம்.
- இப்போதெல்லாம் குறுஞ்செய்தியிலேயே உரையாடலை முடித்துக்கொள்கிறோம்.
அனுப்பியவர் கூறிய விடயம் பாசத்தில் சொல்லப்பட்டதா? கோபத்தில் சொல்லப்பட்டதா? இல்லை, அசட்டையாக சொல்லப்பட்டதா என்பது அவரின் குரல் தொணியிலும் முக பாவத்திலும்தான் தெரியுமே தவிர, குறுஞ்செய்தியில்
தெரியாது என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகின்றோம்.
இறுதியாய் எத்தனையோ மனிதர்கள் ஆனால், அருகிப்போன மனிதம்.
இன்று ஒருவர் விபத்தில் இறந்தால் கூட விபத்து செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிரவே மனிதர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
நவீன உலகில் மனிதர்கள் மிகவும் மும்முரமாக இருக்கின்றனர் ஒரு கையால் மற்றவர்களின் முகமூடிகளை கழற்றுவதிலும், மறு கையால் தங்களின் உண்மை முகத்தை மறைப்பதிலும் மும்முரமாக இருக்கின்றனர்.
இப்படி சமூக பொறுப்புணர்ச்சியின்றி நாம் செய்த பல காரியங்களால் தான்
இன்று மனிதர்களுக்கு சுவாசிக்கும் காற்றில் கூட நிம்மதில்லை. அதுவும்
விஷமாகிவிட்டது. காரணம், மனிதர்கள் ஏற்கனவே பல முகமூடிகளை அணிந்து
சுயநலமாக வாழ்ந்தவர்கள் தான். இன்று முகமூடி அணிந்தே வாழவேண்டிய
நிர்பந்தம் வந்துவிட்டது.
நாம் அனைவரும் உணரவேண்டியது ஒன்றைத்தான். நாம் அனைவரும்
ஒருநாள் நிச்சயம் இறக்கத்தான் போகிறோம். மரணத்தை பார்த்து அஞ்ச
தேவையில்லை.நாம் இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது
நாம் இருக்கப் போவதில்லை. எனவே, சக மனிதர்களையும் நம்மை போல்
நினைத்து சமூக பொறுப்புணர்ச்சியுடன் மற்றவர்களுக்கு உதவவேண்டும்.
சுயநலமற்ற அன்பே உண்மையான அன்பு.
இன்று கொரோனா காரணமாக கொத்து கொத்தாக மனிதர்கள் இறக்கின்றார்கள். இவ்வுலகில் கடைசியில் ஒரு மனிதன் மட்டும் இருக்கும் நிலை வந்தால் கூட அவன் இறப்பதற்கு முன்பு மனிதத்தை இறக்கவிடக்கூடாது என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இதுவே நாம் மனிதனாக பிறந்ததற்கு நாம் செலுத்தும் மரியாதை.
தகவல் உதவி : எஸ். வினோஜா