உலகளாவிய ரீதியில் கடந்த 19 ஆம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதியில் 3.8 மில்லியன் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதன் பிரகாரம் அந்த வாரத்தில் அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் தொற்றுக்குள்ளானவர்கள் 8 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் மேற்படி பிந்திய தரவுகளின் பிரகாரம் பிந்திய தரவுகளின் பிரகாரம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அமெரிக்க மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 30 சதவீதம் மற்றும் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த வாரத்தில் உலகளாவிய ரீதியில் தினசரி புதிதாக சராசரியாக 540,000 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
அதற்கு முந்தைய வாரத்தில் தினசரி சராசரி தொற்று சுமார்490,000 ஆக இருந்தது அத்துடன் கடந்த வாரத்திலான ஏழு நாட்கள் காலப்பகுதியில் அமெரிக்காவில் புதிதாக அரை மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் 131 சதவீதம் அதிகமாகும் அதே சமயம் கடந்த வார காலப்பகுதியில் பிரேசிலில் 324,334 புதிதாக தொற்றுகளும் இந்தோனேசியாவில் புதிதாக 289,029 தொற்றுகளும் பிரித்தானியாவில் புதிதாக 282,920 தொற்றுகளும் இந்தியாவில் புதிதாக 265,836 தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
அத்துடன் கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் கடந்த வாரம் 69,000 க்கும் அதிகமான தொகையால் அதிகரித்திருந்தது.
இது அதற்கு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 21 சதவீத அதிகரிப்பாகும் அதே சமயம் கடந்த வாரம் தரவுகளின் பிரகாரம் கோவிட்-19 கொரோனா வைரஸின் அல்பா வகை 182 நாடுகளிலும் டெல்ற்றா வகை 132 நாடுகளிலும் பீற்றா வகை 131 நாடுகளிலும் காமா வகை 81 நாடுகளிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 42 இலட்சத்து 5 ஆயிரத்து 22 பேர் உயிரிழந்ததுடன் 19 கோடியே 62 இலட்சத்து 85 ஆயிரத்து 699 பேர் தொற்றுக்கு ள்ளாகியுள்ளனர். அதேசமயம் தொற்றுக்குள்ளானவர்களில் 17 கோடியே 81 இலட்சத்து 76 ஆயிரத்து 372 பேர் குணமடைந்துள்ளனர்.