கோவிட் தொற்று வராதவர்களுக்கு அது எப்போது வருமோ என்ற பயம் இருப்பதையும், ஒருமுறை வந்து குணமானவர்களுக்கோ, மரணத்தை வென்றுவிட்ட நிம்மதி உண்டாவதையும் பார்க்கிறோம்.
மிக அரிதாகவே சிலருக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்படுவதால் அது குறித்த பயம் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. இந்த நிலையில் கொரோனாவிலிருந்து குணமானவர்களை பாதிக்கும் ‘லாங் ஹாலர்ஸ்’ (Long Haulers) பிரச்னை இரண்டாம் அலையில் அதிகரித்திருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இந்தப் பிரச்னையை `லாங் கோவிட்’ என்றும் அழைக்கின்றனர்.
இந்த லாங் கோவிட் பற்றியும், இதனால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், தீர்வுகள் பற்றியும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
கோவிட் வந்து குணமானவர்களாக இருப்பார்கள். நுரையீரல், இதயம் எல்லாம் நார்மலாக இருக்கும். ஆனாலும் ரொம்பவே பலவீனமாக, களைப்பாக உணர்வார்கள்.
ஒரு மாடி ஏறினாலே நெஞ்சை அடைப்பது போலிருப்பதாகச் சொல்வார்கள். தூக்கம் வரவில்லை என்பார்கள். மொத்தத்தில் ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பார்கள். இந்த அறிகுறிகளைப் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை என்றே அவரை சார்ந்தவர்கள் நினைப்பார்கள். ஆனால், கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் தென்படுவதை `லாங் கோவிட்’ (போஸ்ட் கோவிட் சிண்ட் ரோம்) என்றும் இந்த அறிகுறிகள் கொரோனா விலிருந்து குணமானதிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
வைரஸ் உருவாக்கும் வீக்கமே இதற்கு காரணம். உலகம் முழுவதிலும் காணப்படுகிற லாங் கோவிட் பிரச்னையிலிருந்து இவர்கள் குணமாக தாமதமாகலாம்.
லாங் கோவிட் பாதிப்புகள் எப்படியெல்லாம் இருக்கும்?
சுவாசப் பிரச்னைகள்
நுரையீரல் பாதிப்பால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் சிலருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டாலும் சீக்கிரமே பழைய நிலைக்குத் திரும்பிவிடும். இன்னும் சிலருக்கு நுரையீரலில் மிதமான பாதிப்பும் வேறு சிலருக்குத் தீவிர பாதிப்பும் இருக்கும்.
தீவிர பாதிப்புக்குள்ளாவோருக்கு ஆயுள் முழுக்க அதன் தாக்கம் தொடரும். சிலருக்கு ஆஸ்துமா தீவிரமடையும். நுரையீரல் பாதிக்கப்படாத சிலருக்கும் லாங் கோவிட் பாதிப்பின் விளைவாக, நடக்கும்போதும் மாடிப்படி ஏறி இறங்கும்போதும் மூச்சு வாங்குவது, சிரமமாக உணர்வது போன்றவை இருக்கலாம். மிதமானது முதல் தீவிர கோவிட் நிமோனியா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப் பிரச்னைகள் இருக்கும். அவர்களுக்கு நுரையீரலுக்கான பயிற்சிகள் மற்றும் அதை மறு சீரமைக்கும் சிகிச்சைகள் கொடுத்து மெள்ள மெள்ள தான் குணப்படுத்த வேண்டியிருக்கும்.
உறுப்புகள் சேதமடைவது
மிக முக்கியமாக பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல். கோவிட் நோயிலிருந்து குணமானவர்களுக்கு மாரடைப்பும் பக்கவாதமும் தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
ஏற்கெனவே இதய நோய்கள் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, இல்லாதவர்களுக்கும் இந்தப் பிரச்னைகள் வருகின்றன. எனவே, டிஸ்சார்ஜ் செய்யும் போதே ரிஸ்க் அதிகமுள்ளவர்கள் என்று தெரிந்தால் முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கு ரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்துகளையும் ஆஸ்பிரினும் கொடுத்து அனுப்புவோம்.
அதீத களைப்பு மற்றும் மனநலமின்மை
சிலருக்கு இரண்டு வாரங்களில் இவை சரியாகிவிடும். சிலருக்கு மூன்று – நான்கு மாதங்கள் கடந்தும் இருக்கும். ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை என்பார்கள். கூடவே மனநிலையில் தடுமாற்றங்களும் சேர்ந்து கொள்ளும். இவர்களுக்கு உணவு மற்றும் தூக்கத்தை முறைப்படுத்தும் சிகிச்சைகள் தேவைப்படும்.
வாசனை மற்றும் சுவை இழப்பு
கொரோனா பாதித்த பலருக்கும் குணமான பிறகு மூன்று மாதங்கள் வரைகூட இந்த அறிகுறிகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னை குறித்து அதிகம் பயப்படத் தேவையில்லை. பெரும் பாலானவர்களுக்கு இரண்டு நாள்களிலிருந்து ஒரு வாரத்துக்குள் இது சரியாகிவிடுகிறது. அரிதாகச் சிலருக்கு அதிலும் இளவயதினருக்கு நீண்ட நாள்கள் இது தொடர்கிறது.
ஏ.என்.எஸ் (Autonomic Nervous System) அறிகுறிகள்
இந்த பாதிப்புள்ளவர்களுக்கு திடீரென இதயத் துடிப்பு அதிகரிக்கும். திடீரென குறையும். இது தவிர்த்து சிலருக்கு குளிர் வரலாம். இரண்டு முதல் நான்கு வாரங்களில் சரியாகிவிடும்.
நீரிழிவு
கோவிட் தொற்றைப் பொறுத்தவரை நீரிழிவு என்பது பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. சிலருக்கு கோவிட் பாதித்த பிறகு, நீரிழிவு வருவதாகச் சொல்கிறார்கள். கொரோனா குறித்த ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாக, ஏற்கெனவே நீரிழிவு வரும் நிலையில் உள்ளவர்களுக்கு அது அப்போது வெளிப்படுகிறது என்று இதைப் புரிந்துகொள்ளலாம்.
நிறைய பேருக்கு நீரிழிவு இருப்பதே தெரியாமல் கொரோனா சிகிச்சைக்கு வருகிறார்கள். பரிசோதித்தால் HbA1c எனப்படும் மூன்று மாதக் கால ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவானது 12 – 13 என்று உச்சத்தில் இருப்பது தெரிகிறது. இன்னும் சிலருக்கு சிகிச்சைக்கு வரும்போது HbA1c அளவு நார்மலாக இருக்கிறது. ஸ்டீராய்டு கொடுப்பதால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஐசியூவில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பான்மையானோர் நீரிழிவாளர்களாகவே இருக்கிறார்கள்.
சிகிச்சைகள் என்ன?
லாங் கோவிட் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளுக்கு மேஜிக் மருந்து எதுவும் கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக உடல்ரீதியான இயக்கங்களை அதிகரிக்கச் செய்வோம். அவர்களைப் படுக்கவைத்து நோயாளிகள் போல நடத்தாமல் உணவு, உறக்கம் போன்றவற்றை முறைப்படுத்தும் விஷயங்களைச் செய்ய வேண்டும்.
தடுக்க முடியுமா?
மாஸ்க் அணிவதும், தடுப்பூசி போட்டுக் கொள்வதும் முடிந்தவரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே கொரோனாவையும் அதன் தொடர் பாதிப்பான லாங்கோவிட் அறிகுறிகளையும் தடுப்பதற்கான தீர்வுகள்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
கோவிட் சிகிச்சை என்பது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போவதுடன் முடிவதில்லை. இரண்டு வாரங்கள் கழித்து அவசியம் மருத்துவரை அணுகி ஓர் ஆலோசனை பெற வேண்டும்.
ரத்தச் சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறதா, ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கிறதா என்பது போன்ற ‘ரிஸ்க் ஃபேக்டர் அசெஸ்மென்ட்’ மேற்கொள்ளப்படும். குடும்ப பின்னணியில் யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, கோவிட் பாதித்த நபருக்கு கடந்த காலத்தில் புகைப் பழக்கம் இருந்ததா என்ற தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் அப்போதுதான் விசாரிக்க முடியும்.
அதற்கேற்ப அவர்களுக்கான ரிஸ்க்கை மருத்துவர்கள் அறிந்து சிகிச்சை அளிப்பார்கள். குணமான பிறகு இரண்டு – நான்கு வாரங்களில் மேற்கொள்ளப் படும் இந்த மருத்துவ ஆலோசனை வரை அடங்கியது தான் முழுமையான கோவிட் சிகிச்சை. குணமான பிறகும் கண்களில், முகத்தில் வீக்கம், மறுபடி காய்ச்சல் என எந்த அறிகுறி வந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவரைப் பாருங்கள்.
போஸ்ட் கோவிட் கிளினிக்
கொரோனா நோயாளிகளில் ஹைப்பாக்ஸியா பாதித்தவர்களையும் காய்ச்சல் அதிகமுள்ளவர்களையும் தான் மருத்துவமனையில் அனுமதிக்கிறோம். இரண்டு நாள்கள் கண்காணிப்பில் அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு நார்மலாக இருந்து, காய்ச்சலும் குறைந்தால் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.
இவர்களை இரண்டு வாரங்கள் கழித்து மறுபடி வரச் சொல்வோம். பெரும்பாலானவர்கள் நார்மலாகவே இருப்பார்கள். அவர்களில் சிலர், இன்னும் குணமாகவில்லை, ஏதேதோ அறிகுறிகள் தோன்றுகின்றன என்பார்கள். மிதமான நிமோனியா உள்ளவர்கள் இப்படிச் சொன்னால் மருத்துவர்களுக்கு அலாரம் அடிக்கும். அவர்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்து அடுத்த ஒரு மாதத்துக்கு அவர்களுக்கு இதய பாதிப்புகளுக்கான ரிஸ்க் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் மருத்துவர்கள் கண்காணிப்பார்கள்.
எனவே, பூரணமாகக் குணமாகிவிட்டதாக நினைத்துக்கொண்டு, போஸ்ட் கோவிட் கிளினிக்குகளில் ஆலோசனை பெறும் விஷயத்தைத் தயவுசெய்து தவிர்க்காதீர்கள்.
தகவல் உதவி : சென்னை தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
வீட்டிலிருக்கும் தடுப்பூசி போடாத முதியவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பது எப்படி?
இது போன்ற கோவிட் -19 உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்.