சிரிப்பு என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கொடுத்த விஜய் டிவியின் நகைச்சுவை அடிப்படையிலான சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 2வின் இறுதி போட்டி நேற்று ஏராளமான சிரிப்பு, அளவுக்கடங்கா உணர்ச்சிகள் மற்றும் ஆனந்த கண்ணீரோடு பிரியாவிடை பெற்றது.
குக் வித் கோமாளி சீசன் 2 இறுதிப்போட்டி
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் மக்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக அணமைக் காலத்தில் மாறி மக்களின் ஈடில்லா ஆதரவை பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 வின் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதிப்போட்டி 6 மணி நேர நிகழ்வாக ஒளிபரப்பப்பட்டது.
வழக்கம் போல முதல் ரவுண்டில் அட்வான்டேஜ் டாஸ்க்குடன் ஆரம்பித்த போட்டியில் சைக்கிள் மிதித்து தர்ப்பூசணி அரைக்கும் போட்டியில் பாபா பாஸ்கர் மற்றும் பாலா அணி அட்வான்டேஜ் வென்றது.
அதன் பின் முக்கிய சமையல் 3 பாகமாக 30, 40, 30 எனும் புள்ளி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அதில் முதல் போட்டியில் கோமாளிகள் வரையும் காய்கறியில் மூன்றில் ஒன்றை வைத்து சமைக்கும் 40 நிமிட டாஸ்க், இரண்டாவதில் ஸ்டாட்டர், மெயின் கோர்ஸ், டெஸெர்ட் என புல் மீல் தயாரிக்கும் 1.5 மணிநேர டாஸ்க், இறுதியாக கோமாளி கண்ணைக் கட்டி சுழலும் மேடையில் இருந்து எடுக்கும் பொருளை வைத்து செய்யும் உணவு டாஸ்க் என அமைந்தது.
இவை மூன்றிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்கள் வந்தனர். முதலாவதாக 99 சாங்ஸ் திரைப்படத்தை பற்றி பேச அதன் கதாநாயகன் மற்றும் திரைக்கதை அமைப்பாளர் வந்திருந்ததுடன் வீடியோ கால் மூலம் இசைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மான் இணைந்து கோமாளிகளையும் குக்குகளையும் கலாய்த்து விளையாடினர். 99 சாங்ஸ் திரைப்படத்தை பற்றி பல விடயங்களைக் கூறினார். அப்படத்தை பற்றி மேலும் அறிய எமது கட்டுரையை வாசியுங்கள்.
அடுத்த பகுதியின் முடிவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு உணவு சுவைப்பதில் தன்னுடைய கருத்துக்களை பரிமாறியதோடு இது மிக சிறந்த நிகழ்ச்சி என்றார். அவரோடு இணைந்த என்ஜாய் எஞ்ஜாமி புகழ் தீ மற்றும் அறிவு ஆகியோர் கலந்து கொண்டு அந்தப் பாடலாய் பாடியதுடன் சிறப்பு குக்கு வித் கோமாளி வெர்ஷன் ஒன்றையும் பாடினார்.
இறுதி பகுதியின் தொடக்கத்திலேயே இந்தளவு சிறப்பான நிகழ்ச்சியின் கடைசி சமையல் இது என்ற உணர்வு எல்லோரிடமும் ஊடுருவ தொடங்கியது. அந்த நேரத்திலேயே இணைந்து கொண்ட சிம்பு ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்ப்பவர் என தெளிவாக தெரிந்தது. அனைவரைப் பற்றியும் பேசியதோடு சமையல் நேரம் முழுவதும் கோமாளிகளோடு விளையாடியும் அவர்களை ஊக்கப்படுத்தியும் இணைந்திருந்தார்.
சமையல் முடிந்ததும் அனைவருக்கும் ஒவ்வொரு பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. அவற்றை சிம்புவே வழங்கி வைத்தார். அந்த நொடி முதலே நிகழ்ச்சி மகிழ்ச்சி நிறைந்த கண்ணீரில் நனைய ஆரம்பித்தது. பார்க்கும் ஒவ்வொருவையுமே அழ வைக்குமளவு உண்மைத்தன்மையும் உணர்வும் தொனித்தது. முக்கியமாக செப் தாமு மற்றும் கோமாளி சரத் அழுததை பலரால் தாங்க முடியவில்லை.
பின்னர் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
- காரக்குழம்பு கனி என செல்லமாக அழைக்கப்படும் கனி வித்தியாசமான தனது முயற்சிகளை நிரூபித்து பட்டத்தை தட்டிச் சென்றார்.
- அம்மா என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஷகீலா தனக்கான சமூக அன்போடு இரண்டாவது இடத்தையும் வென்றிருக்கிறார்.
- எல்லா தகுதிகளுமிருந்தும் படங்கள் வெளியாகாமல் நாடகங்கள் நடித்து இன்று வரை கஷ்டப்பட்ட அஸ்வின் மூன்றாவது இடத்தோடு மக்கள் மனதில் “அஸ்வினே” என்ற செல்லப்பெயரோடு திரையுலக வெற்றி நாயகனாக வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். அவரது முன்னைய கஷ்டங்கள் பற்றி இக்கட்டுரையில் வாசிக்க.
தொடர்ச்சியாக சிறப்பாக சமைத்தது வந்த பாபா பாஸ்கருக்கு நேற்று நாள் சரியாக அமையவில்லை. எப்போதுமிருக்கும் உற்சாகமும் இருக்கவில்லை. பவித்ராக்கும் அடி சறுக்கி விட்டது.
கடைசியாக நிகழ்ச்சியின் முடிவில் வெற்றிக்கு காரணமான நிகழ்ச்சியின் எடிட்டர்களை மேடையில் கூப்பிட்டு கௌரவித்தது விஜய் டீவிக்கே உரிய சிறப்பு. அதோடு DJ பிளாக் முதலான எல்லோருக்கும் நன்றி கூறியதோடு செல்லப்பிள்ளை ரக்ஷனும் எல்லோரது அன்பையும் பெற்று கண்கலங்கினார்.
குக் வித் கோமாளி சீசன் 2வின் சிறப்பு
அப்போது ஆரம்பித்த பிரியாவிடை சோகம் நேயர்களை வாட்ட ஆரம்பித்தது. அந்த நிகழ்ச்சி எவ்வளவு குதூகலமாக இருந்தது என்பது தொடர்பான எடிட்களும் எல்லோர் கண்ணிலும் கண்ணீரும் இனி இந்த நிகழ்ச்சியை பார்ப்பது எப்படி என்ற ஏக்கமும் கண்களில் குளமாக நிரம்பியது. இன்னொரு குக் வித் கோமாளி சீஸனும் வரலாம். ஆனால், சுனிதா தமிழ் கற்றுக் கொண்ட, மதுரை வீரன்தானே என்ற சத்தம் முதல் முதலில் கேட்ட, மாரி பாடல் கேட்டாலே மாஸ்டர் புகழை தூக்கிய, ”வலி மங்க வலிப்” நடனத்தை “அஸ்வினே” என்ற ஒலியை, எமக்கு கொடுத்த குக் வித் கோமாளி 2 மக்கள் மனம் விட்டு என்றும் பிரியாத ஒரு வாழ்விய அங்கமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இதுபோன்ற சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு எமது சினிமா பக்கத்தை நாடவும்.
3000+ இதயங்களின் ஆதரவுடன் தினமும் தமிழ் சமூகத்தின் அறிவுத்தாகத்தை தீர்க்கும் நமது பக்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்