இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமியைவிட சித்ரா பௌர்ணமியானது முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும் சிறப்பானதாகும்.
விரதம் இருப்பது எப்படி?
சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.
மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பால் சேர்த்து பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
படையலுடன் எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்த கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த பானகங்களை தயாரித்து சித்ரா பௌர்ணமியன்று நண்பகல் ஏழைகளுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
விரத பலன்கள்
சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மனஅமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தரை மனதார வழிபடுங்கள்.
சித்ரகுப்தன்
சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது மக்களின் நம்பிக்கை.
சித்ரகுப்தரின் பிறப்பு
பார்வதி அம்பாள் சித்ரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்ரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா என பெயர் பெற்றார் என்று சிலர் கூறுகின்றனர்.
காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும், அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.
சித்ரகுப்தன் கதைச் சுருக்கம்
தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருப்பதாக ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொண்டார். அதன் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார்.
இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்கு தெரிவித்தார் பிரம்மதேவர். அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிரில் பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்ர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார்.
சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.
தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
சித்ரகுப்தருக்கான கோயில்கள் :
தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சித்ரகுப்தர், எமன், பிரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்ர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்ர புத்திர நாயனார்தான் என்பது நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. எனவே, சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
மக்கள் பாவச்செயல் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச்செயலில் ஈடுபட வேண்டும் எனவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்பலன்களை பெறுவோமாக.
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.