என் மனைவிக்கு பென்சிலின், அனால்ஜின், ஆம்பிசிலின் போன்ற மருந்துகள் அலர்ஜி. சுகர், பிபி போன்ற இணைநோய்களும் இருக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படுகிறார். ஆரம்ப சுகாதார மையத்துக்குப் போனபோது அலர்ஜி இருப்பதைச் சொன்னதும் அவர்களே ஊசி போட மறுத்து பெரிய மருத்துவமனைக்குப் போகச் சொல்லிவிட்டார்கள். அவருக்கு ஊசி போட்டால் பாதிப்பு வருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சைகளுக்கான சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
இங்கே இவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன். எந்த மருந்து அலர்ஜி இருந்தாலும் அது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தடையில்லை.
ஏதோ மருந்து எடுத்துக்கொண்டதால் உடலில் தடிப்புகள் ஏற்பட்டது என்பதையெல்லாம் சீரியஸான அலர்ஜியாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஒரு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு, அவர்களுக்கு உயிருக்கே ஆபத்தாக முடிகிற அனாபிலாக்டிக் ரியாக்ஷன் (anaphylactic reactions ) எனப்படும் அதிதீவிர ஒவ்வாமை ஏற்பட்டு, நாக்கு, உதடுகள் தடித்துப் போய், மூச்சுக்குழல் தடித்து, மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டாலோ, ரத்த அழுத்தம் மிகவும் குறைந்தாலோ, மயக்கநிலை ஏற்பட்டு சுயநினைவை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்து, ஐ.சி.யு-வில் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலைக்குப் போனாலோ, அவற்றையெல்லாம் தீவிர பின்விளைவுகள் என்று சொல்கிறோம்.
அத்தகைய பாதிப்புகளைச் சந்திப்பவர்களுக்கு மட்டும் கொஞ்சம் கவனமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
கொரோனாவுக்கு புதிய மருந்துகள் ஏதேனும் விரைவில் வருமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவரும், ஐசிஎம்ஆரின் நேஷனல் கோவிட் டாஸ்க் ஃபோர்ஸின் கிளினிகல் ரிசர்ச் குழுவைச் சேர்ந்தவருமான குமாரசாமி.
கோவிட் தொற்றுக்குள்ளானவர்களை அறிகுறிகளற்றவர்கள், குறைந்த பாதிப்புள்ளவர்கள், மிதமான பாதிப்புள்ளவர்கள் மற்றும் தீவிர பாதிப்புள்ளவர்கள் என்று வகைப்படுத்தலாம். இவர்களில் அறிகுறிகளற்ற 60 சதவிகிதம் பேருக்கு எந்தச் சிகிச்சையும் தேவைப்படாது. அதனால் அவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறோம்.
சிலருக்கு தொண்டைவலி, மிதமான காய்ச்சல், இருமல் இருக்கலாம். தேவையிருந்தால் ஆன்டிபயாடிக்கும், பாராசிட்டமாலும் கொடுக்கிறோம். அடுத்த பிரிவினருக்கு மூச்சு வாங்குதல், உறுப்புகள் பாதிப்பு, ஏற்கெனவே உள்ள பாதிப்புகள் தீவிரமாதல் போன்றவை ஏற்படலாம். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இப்படி ஒவ்வொருவருக்குமான சிகிச்சைகள் வேறுபடும்.
எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கும்வகையில் பொதுவான ஒரு மருந்துக்கான ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. தொற்று வந்த 7 முதல் 10 நாள்களுக்குள் இந்த மருந்தைக் கொடுத்துவிட்டால் அவரது உடலில் வைரல் லோடு குறைவதோடு, அடுத்தவருக்குப் பரப்புவதும் கட்டுப்படுத்தப்படும். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.
மோனோகுளோனல் ஆன்டிபாடி என்ற மருந்து குறைந்த மற்றும் மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலும் இந்த மருந்து கிடைக்கிறது. இரண்டு மருந்துகளின் கலவை இது.
இந்த மருந்தை ஒரு டோஸ் இன்ஜெக்ஷன் மூலம் தொற்று ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள் கொடுத்துவிட்டால், வைரஸ் உள்ளே பெருகுவதைத் தடுக்கும். ஆனால், இதன் விலை கிட்டத்தட்ட ரூ.60,000. தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு இது உதவாது. அமெரிக்காவில் ட்ரம்ப் எடுத்துக்கொண்ட ஆன்டிபாடி காக்டெயில்தான் இது.
அடுத்தடுத்த வருடங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?
பதில் சொல்கிறார் வாஷிங்டனின் சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி’ அமைப்பின் இயக்குநரும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் விரிவுரையாளருமான ரமணன் லட்சுமி நாராயணன்.
உங்கள் சந்தேகம் சரியானதே இனி வரும் காலங்களில் வருடந்தோறும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலையை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அப்படி வரும்பட்சத்தில் வேறு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம்.
கொரோனாவுக்கு எதிராக இப்போது நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசியின் செயல்திறன் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும்?
இப்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் நமக்கு அறிமுகமாகி சில மாதங்களே ஆவதால், அவற்றின் செயல்திறன் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பதற்கான முழு ஆதாரங்கள் இல்லை. அதனால் இப்போது அதைப் பற்றி உறுதியாகச் சொல்வதற்கில்லை.