சார்லி சாப்ளின் இளமைப் பருவம்..!!
சார்லி சாப்ளின் அவர்கள், ஏப்ரல் 16ஆம் தேதி 1889ஆம் ஆண்டு லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் – ஹன்னா சாப்ளின் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்பதாகும்.
இவரது குழந்தைப்பருவம் அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை. இவர் பிறந்த சில தினங்களிலேயே இசைக் கலைஞர்களான இவரது பெற்றோர் சார்லஸூம், ஹன்னாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
சார்லி சாப்ளின் தனது சிறுவயதில் தனது தாய் மற்றும் சகோதரர் சிட்னியுடன் லண்டனில் உள்ள கென்னிங்டனில் வாழ்ந்தார். வாடகை தர முடியாத காரணத்தால் இவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி, சாப்ளின் மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி மாற்றப்பட்டனர். சார்லி சாப்ளினின் தந்தை, சார்லஸ் சாப்ளின் இவர்களுக்கு நிதி உதவியையும் வழங்கவில்லை.
இவர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமடைந்ததால், சாப்ளின் ஏழு வயதாக இருக்கும்போது லம்பேத் பணிமனைக்கு அனுப்பப்பட்டார். அதன்பின் சார்லி சாப்ளின் 18 மாதங்களுக்கு பிறகு தனது தாயுடன் மீண்டும் சேர்ந்தார்.
தொடர் குடும்பப் பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானார் தாய் ஹன்னா. இதனால், பேசும் திறனை இழந்த ஹன்னாவிற்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அவர் சிகிச்சைக்காக மனநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். தாய் மனநல மருத்துவமனையில் இருந்ததால், சாப்ளின் மற்றும் அவரது சகோதரர் சிட்னி ஆகியோர் தந்தையுடன் வசிக்க அனுப்பப்பட்டனர். அப்போது சார்லஸ் குடிபோதைக்கு அடிமையாக இருந்தார். அதன்பின் சாப்ளினின் தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உடல்நல குறைவால் இறந்தார்.
அதன்பின் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். அங்கே சாப்ளின் சந்தித்ததெல்லாம் வாழ்வில் ஒருபோதும் எதிர்பார்த்திராத துயரங்களை மட்டுமே. தனிமையும், உடல் உபாதைகளும் அவரை மிகவும் வாட்டியது. ஆனால், அவை அத்தனையையும் சகித்துக் கொண்டு அங்கேயே இருந்தார் சாப்ளின். அதிக கண்ணீர் வடித்த நாட்கள் இவை என பின்னாளில் சாப்ளின் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் இவருக்குள் ஓடியது.
முதல் நடிப்பு :
முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது ஐந்து வயதிலேயே தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். பல நாட்கள் உடல்நல குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்து காட்டுவார்.
சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். பின்பு சிறு சிறு நாடகங்களில் நடித்து வாழ்க்கையை நடத்தினார்.
சாப்ளினின் குறும்புத்தனமான நகைச்சுவை நடிப்பு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல், பின்னாளில் உலகத்தையே தன் நகைச்சுவை நடிப்பால் கட்டி போட போகிறவர் என்பது சிறுவயதிலேயே அவருக்கு இருந்த ரசிகர்கள் மூலம் உறுதியானது.
அதன் பிறகு சார்லி சாப்ளின் அவர்களுக்கு கிடைத்த நிரந்தமான வேலை என்ன?
சார்லி சாப்ளினின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கி கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும், புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையும் ஆகும்.
ஷூ – மீசை :
தன்னுடைய சக கலைஞர்களின் உதவியால் குண்டாக இருந்தவரின் சிறிய சட்டையையும், காலுக்கு பொருந்தாத பெரிய ஷூக்களையும், தொப்பியையும் வைத்து ஒத்திகை பார்த்தார். அந்த பெரிய ஷூக்கள் அவர் காலை விட்டு விலகி போக, அதை கால்களில் மாற்றி போட்டார்.
கையில் பிரம்புத்தடி ஒன்றை எடுத்து கொண்டு தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்த சாப்ளின் தான் மிகவும் சிறியவனாக தெரிவது போல உணர்ந்து ஒரு மீசையை வரைந்தார். ஆனால், அந்த மீசை அவரது முக அசைவுகளை மறைத்தது. அதனால் சிறியதாக ஒரு மீசையை வெட்டி ஒட்டிக் கொண்டார்.
சிரிப்பு :
ஒரு வழியாக உடை, முக அலங்காரம் எல்லாம் முடிந்து நடக்க முடியாமல் நடந்து வந்தார் சாப்ளின். அப்போது குழுவில் இருந்தவர்கள் அதிசயமாக சாப்ளினை பார்த்தனர். கால்கள் இரண்டையும் அகலப்படுத்தி நடந்து வந்த சாப்ளின் எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒருவர் மீது மோதி கீழே விழுந்து எழ முடியாமல் எழுந்தார். இதை பார்த்த அங்கிருந்த மொத்த கலைஞர்களும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
இதை பார்த்த சாப்ளினோ தலையில் இருந்த தொப்பியை கழட்டி, அசைத்து மன்னிப்பு கேட்டார். இதை பார்த்தும் குழுவினர் ரசித்தனர். இந்த பாணி, இந்த புதுமை, இந்த நவீனம், இந்த அசைவுகள், இந்த நடிப்பில் அந்த கீஸ்டோன் நிறுவனம் விழுந்தே விட்டது. தொடர்ந்து 35 படங்களில் சாப்ளினை நடிக்க வைத்தது.
ஆரம்பத்தில் 150 டாலர்களை மட்டுமே ஊதியமாக பெற்றுவந்த நிலையில், தனது அபரிவிதமான வளர்ச்சியினால் 1917ஆம் ஆண்டுகளில் ஒரு மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து தனது அனுபவங்களை பயன்படுத்தி 1919ஆம் ஆண்டு யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் எனும் கலையகத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் திரையுலகில் கதை வசனமின்றி, தனது உடல் அசைவினாலும், தன்னிகரற்ற நடிப்பினாலும் நகைச்சுவைகளை வெளிப்படுத்தி அதன் மூலம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கலைஞராக சார்லி சாப்ளின் வளர்ந்தார்.
1927 ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும், 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமையாளராக திகழ்ந்தார் சாப்ளின்.
1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் தயாரிப்பு, இயக்கம், நடன அமைப்பையும், 1928ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘தி சர்க்கஸ்” படத்தின் தயாரிப்பு, இயக்கத்தையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல் ஆகும்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..