இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படி?
நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது.
அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், தங்கம் வாங்க இயலாதவர்கள் அட்சய திருதியை நாளில், சிறிதளவு உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் கூட செல்வ வளம் பெருகும்.
யாரை வழிபட வேண்டும்?
இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து விரதமிருந்து வழிபட்டால் குறைவில்லாத செல்வத்தை பெற்று சிறப்பான வாழ்க்கையை பெற்றிடலாம்.
அட்சய திருதியை நாளன்று அதிகாலை எழுந்து நீராடி, பூஜையறையில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். கோலம் போட்டபின் அதன்மேல் ஒரு பலகை வைத்து அதில் கோலமிடுங்கள். அதில் வாழை இலையை போட்டு, அதன் நடுவே பச்சரிசியை பரப்பி, அதன்மேல் செம்பில் நீர் நிரப்பி, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து, அதை சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக அமைத்திடுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள்.
லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். பின்னர் காமாட்சி விளக்கு அல்லது குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து குங்குமம் இட்டு வாழையிலையில் வலப்பக்கம் வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். முதலில் விநாயகரை மனதார வேண்டி கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.
அன்றைய தினம் மாலையில் கலசத்துக்கு மீண்டும் தூப தீப ஆராதனையை காட்டி, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.
அட்சய திருதியை நாளில் பயன்படுத்திய அரிசி, கலச தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையில் பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம்.
அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது விட முக்கியமானது தானமளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.
அட்சய திருதியை.. தங்கம் வாங்குவது மட்டுமே நல்லது என்று நினைப்பது ஏன்?
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும் என்று யார் எப்போது கூறினாரோ தெரியாது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாகத் தான் இந்த அட்சய திருதியை மோகம் மக்களிடம் அதிகரித்துள்ளது. இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மக்களின் இந்த மோகம்.
தங்கம், வெள்ளி நகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தாலும் கூட அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கம் வாங்கி வருகின்றனர்.
புராண காலத்தில் சித்திரை மாதம் வளர்பிறையின் மூன்றாவது நாள் செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்றும், வேத காலங்களில் சான்றோர்கள் அட்சய திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்கள்.
அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளின் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து.
அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும். கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வில் வளம் பெருகும். மேலும் தங்கம், வெள்ளி வாங்குவது சிறந்தது ஆகும்.
வசதி படைத்தவர்களால் நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்யமுடியும். ஆனால், தற்போது தங்கம் விற்கும் விலையில் நடுத்தர குடும்பங்களால் நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தலையை அடகு வைத்தாவது அட்சய திருதியை அன்று நகை வாங்கியே தீருவேன் என்று அடம்பிடித்து குடும்பத்தில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
வாழ்வில் உண்மையான வளம் பெற நாம் தங்கம், வெள்ளி நகைகளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தர்மங்களைச் செய்யுங்கள். பூஜை புனஸ்காரங்களில் மனதை லயிக்கச் செய்யுங்கள். பண்டிகைகளின் உண்மையான நோக்கங்களை நாம் என்று சரியாகப் புரிந்து கொள்கிறோமோ அன்று தான் நமக்குத் தெளிவான சிந்தனை கிடைக்கும்.
சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்நாளில் எதையெல்லாம் தவிர்த்தால் நல்லது