தெலுங்கு படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லத்தனமான வேடங்களில் மிகவும் பிரபலமான தென் நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி செவ்வாய்க்கிழமையான இன்று காலமானார். அவருக்கு வயது 74. இருதய நோயால் பாதிக்கப்பட்டு நடிகர் இறந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குண்டூரில் உள்ள அவருடைய இல்லத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
பிரம்மா புத்ருது, சமரசிம்ம ரெட்டி, உத்தமபுத்திரன், ஆறு, ஆஞ்சநேயா மற்றும் அவனு வள்ளிதரு இஸ்தா படாரு போன்ற பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்த ஜெய பிரகாஷ் ரெட்டியின் மரணத்தால் திரையுலகம் அதிர்ச்சியையும் சோகத்தையும் சந்தித்துள்ளது.
ஜெய பிரகாஷ் ரெட்டி ஒரு மிகச் சிறந்த இந்திய தெலுங்கு நடிகர். அவர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சிர்வெல்லில் 10 அக்டோபர் 1946ல் பிறந்தார். அவர் சமரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்துடன் பிரபலமாக வந்தார், அப்படத்தில் அவர் வீர ராகவா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். ஜே.பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், ஜெயம் மனதே ரா மற்றும் சென்னகேசவ ரெட்டி என்ற ஹிட் படத்தில் வில்லனாக நடித்தார். வில்லன் வேடங்களைத் தவிர, பல நகைச்சுவை படங்களிலும் ஜே.பி. நடித்தார்.
நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி
தமிழில் இவர், ஆறு படத்தில் ரெட்டி வேடத்திலும், ஆஞ்சநேய படத்தில் ஜெய பிரகாஷ் எனும் வேடத்திலும், சின்னா திரைப்படத்தில் சின்னாவின் பழைய முதலாளியாகவும், தர்மபுரி திரைப்படத்தில் MLA கொண்ட மூக்கனாகவும், திரு ரங்கா திரைப்படத்தல் ரெட்டியாகவும், உத்தம புத்திரன் திரைப்படத்தில் சின்னமுத்து கௌண்டராகவும் நடித்துள்ளார். அதிலும் சின்னமுத்து கௌண்டர் வேடத்தில் தானே தமிழ் பேசியும் உள்ளார்.
நாகார்ஜுனா, வெங்கடேஷ் தகுபதி, மகேஷ் பாபு, பிரகாஷ் ராஜ், ஜூனியர் என்.டி.ஆர், எஸ்.எஸ்.ராஜமௌலி, சுதீர் பாபு, ஜெனிலியா டிசோசா, காஜல் அகர்வால், சுரேந்தர் ரெட்டி, சத்யதேவ் காஞ்சரனா மற்றும் பிற நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து ட்விட்டரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டர் கட்டுரையில் இவ்வாறு எழுதினார்: “ஜெயபிரகாஷ்ரெடி அவர்களின் திடீர் மறைவு பற்றி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் கொண்டேன். அவருடன் மிகச் சிறந்த காலத்துக்கு பணியாற்றி உள்ளேன். சில மறக்கமுடியாத நகைச்சுவை மற்றும் வில்லன் பாத்திரங்களை சித்தரிப்பதன் மூலம் உங்கள் பல்துறைத்திறனுடன் எங்களை மகிழ்வித்ததற்கு பல கோடி நன்றிகள். உங்கள் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.
மன்மதுடு, கிங், பாய் மற்றும் ஆதிபதி போன்ற பல படங்களில் ஜெய பிரகாஷ் ரெட்டியுடன் தனது திரையைப் பகிர்ந்து கொண்ட நாகார்ஜுனா ட்வீட் செய்ததாவது: “அவர் ஒரு சிறந்த மனிதர், திரு ஜெய பிரகாஷ் ரெட்டி அவர்கள் … அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் மற்றும் அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.”
“எனது அன்பான நண்பர் ஜெய பிரகாஷ் ரெட்டி கருவின் திடீர் மறைவு குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். நாங்கள் திரையில் மிகச் சிறந்த ஒரு கூட்டணியாக இருந்தோம். நிச்சயமாக அவரை நாங்கள் இழக்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் பிரார்த்தனை செய்கிறோம்” என்று ட்வீட் செய்த வெங்கடேஷ் தகுபதி கணேஷ், துளசி, பிரம்மா புத்ருது போன்ற பல படங்களில் மறைந்த நடிகருடன் இணைந்து நடித்தவர்.
“சக நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டியின் திடீர் மரணம் என்னை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிப்பு அவரது வாழ்க்கை. அவர் வெள்ளித்திரையிலும் மேடை நாடகங்களிலும் நடித்த பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த நடிகர். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி CHIEF, RIP” என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகை ப்ரணிதா இது தெலுங்கு திரையுலகுக்கு பெரிய இழப்பு என பதிவு செய்தார்.
நடிகை காஜல் அகர்வால் ஓம் ஷாந்தி! ஜெய பிரகாஷ் ரெட்டி காரு, அவரது குடும்பத்துக்கு இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே : சாட்விக் ஆரோன் போஸ்மேன் மறைவு 1976-2020
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்..