ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். நதியைப் பெண்ணாக வணங்கும் நாள்! அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச் சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.
வீட்டில் பூஜை செய்ய ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.
ஒரு தாம்பாலத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்யச் சரடு என்று பெண்கள் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைக்க வேண்டும்.
பின்பு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும், சூரிய பகவானையும் வணங்க வேண்டும்.
ஆடிப்பெருக்கு அன்று தாலிக்கயிற்றை மாற்றுவதன் ரகசியம் இதுதான்…!!
ஆடிப்பெருக்கு அன்று புதுத் தாலி மாற்றுவது ஏன்?
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்குரிய மாதமாகவும் இது போற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதமும் ஆடி மாதம் தான்.
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் அதாவது, கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம்.
சித்திரை, வைகாசி, ஆனி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய வெயிலின் தாக்கம் குறைந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக்கூடிய அளவிற்கு புது வெள்ளம் வரும்.
இந்த புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப்பெருக்கு. அந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (02.08.2020) அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்குவார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது விசேஷமாகும்.
பெருக்கெடுத்து ஓடிவரும் புதுவெள்ளம், புது நீர் வரும்போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வது போன்ற நிகழ்வுகளை செய்வார்கள்.
ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். இது ஒரு வித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் பூசம் நட்சத்திரத்தினுடைய டிகிரியில் இருந்து மாறி, புதன் கிரகம் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மையின் சதவிகிதம் அதிகரிக்கும்.மேலும், இயற்கை உணவுகளான வெல்லமிட்ட அரிசி, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுதல், பொங்கல் வைத்து அம்மனுக்கு விசேஷப் பூஜைகள் செய்வது, புத்தாடை அணிதல், எல்லை தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்துதல் இவையெல்லாம் நல்ல பலன்களை தரும்.
ஏன் மாங்கல்ய கயிற்றை மாற்றுகின்றோம்?
அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டுமானால், மஞ்சள் என்பது கிருமி நாசினி ஆகும். மஞ்சள் தடவிய கயிற்றை ஆடிப் பெருக்கு அன்று மாற்றிக் கொள்வதால் கிரகங்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மற்றும் கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள், பெண்களுக்கு ஏற்படும் பலவிதமான ஆரோக்கியம் சார்ந்த இன்னல்களில் இருந்து காக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.
மேலும், அன்றைய தினத்தில் உறவினர்களுடன் கூடியிருக்கும்போது அவர்களின் மனமும் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும். மேலும் மாங்கல்ய கயிற்றில் மஞ்சள் இருப்பதினால் கிருமிநாசினியும், அவர்களுடன் இணைந்து அவர்களை பாதுகாக்கும் அரணாக செயல்பட துவங்குகின்றது. இதுவே ஆடிப்பெருக்கு அன்று மாங்கல்ய கயிறு மாற்றுவதன் ரகசியம் ஆகும்.ஆகவே சுமங்கலி மற்றும் கன்னி பெண்கள் யாவரும் புனிதமான ஆடிப்பெருக்கு நாளை தவறவிட வேண்டாம். ஏனெனில் சமயமும், ஆரோக்கியமும் சார்ந்து நமது முன்னோர்கள் சொன்ன வைத்திய முறை இதுவாகும்.
இன்றைய சூழ் நிலையில் கொரோனா காரணமாக ஆற்றங்கரைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதினால் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பூஜித்த பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை தனியாக எடுத்து வைத்து கொண்டு அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன்பாக சமூக இடைவெளியுடன் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் போட்டு வணங்குவீர்களாக.
வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.
திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அம்மனை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
அறிவியலும், முன்னோர்களின் வைத்தியமும்
இந்த நன்னாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும் சொல்லலாம். காதோலை கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் வம்ச அபிவிருத்தி (நற்குழந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?
நிறைக்குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்.
பூக்கள் தூவி அம்மனை போற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும்.
ஆடிப்பெருக்கு நாளை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடி மகிழுங்கள்…!!
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்…