இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
ஆடிப்பெருக்கு புராணம் சொல்லும் கதை இந்நாளில் என்ன செய்கிறார்கள்?
ஆடிப்பெருக்கு பற்றிய புராணக்கதை
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளை ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நதிகளை வழிபடுவதன் மூலம் நீர்வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும் சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.
புராணங்களில் கூறப்படும் ஆடி 18 என்பது மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்ஷேத்திரப் போரின் இறுதி நாளான 18வது நாளை குறிக்கிறது.
புராணக் கதை
குருச்ஷேத்திரப் போரின் முதல் நாள், பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்பட்டனர். பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான். இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர்.
16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். அர்ஜூனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.
ஒரு நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை கொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அர்ஜூனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.
குருச்ஷேத்திரப் போரின் இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.
அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18ஆம் நாளாகும்.
ஆடிப்பெருக்கு நாளில் புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக்கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாக கருதி, பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கள காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.
அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு, அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து, அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.
ஆற்றங்கரைக்குப் போகும் பொழுதே, ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமாங்கல்ய சரடு என்று ஒரு பெண் விரும்பி ஏற்கும் அனைத்தையும் வைத்து, மற்றொரு முறத்தில் மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் இவற்றை வைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்குவர்.
இந்த நன்னாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும் சொல்லலாம். காதோலை கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
தானிய அபிவிருத்தி (பயிர்கள் செழிக்க) அருளும் அம்பிகையை, பெண்கள் வம்ச அபிவிருத்தி (நற்குழந்தைப் பேறு) வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள்.
ஆடிப்பெருக்கன்று பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. மேலும், புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?
நிறைக்குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரை பொங்கல் படைக்க வேண்டும்.
பூக்கள் தூவி அம்மனை போற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும்.
ஆடிப்பெருக்கு நாளை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடி மகிழுங்கள்.