இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
நாளை சனி மஹாப்பிரதோஷம் பாவங்கள் நீங்க சிவனை விரதமிருந்து வழிபடுங்கள்!!
சனி மஹாப்பிரதோஷம்!!
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரதான தோஷங்களை நீக்குவது தான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மஹாப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி நாளை சனிக்கிழமை (12.12.2020) சனி மஹாப்பிரதோஷம் ஆகும்.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனிப்பிரதோஷம்.
விரத முறை
பிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும்.
பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் ‘சனிப்பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் ‘மஹாப்பிரதோஷம்” என்று வழங்கப்படுகிறது.
சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப்பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முதல் சுற்றில் செய்யப்படும் வேத பாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.
பிரதோஷ வேளையில் நந்தியம் பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜெபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனைத் தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.