அஷ்டமி நவமி ஆகிய நாட்கள் நாம் நல்ல விடயங்கள் செய்யத் தகாதவை என்று சொல்கிறார்களே, இதனை எவ்வாறு ஏற்பது ? எதற்காக நாம் மாத மாதம் 2-4 நாட்களை நல்ல விடயங்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவும் மூட நம்பிக்கையோ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல. இதன் பின் மாபெரும் வானியல் விளக்கம் உள்ளது.
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? என்பது பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா ? கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் எனும் சிறந்த நூலில் இது பற்றிய விளக்கம் உள்ளது அதனைப் பார்ப்போம்.
அஷ்டமி நவமி நாட்களில் ஏன் நல்ல விடயங்கள் செய்யக் கூடாது – கண்ணதாசன்
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .
நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்குக் என்ன காரணம் ?
அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.
கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.
ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.
அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)
நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.
அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.
சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஈர்ப்புக்கு பொருத்தமான ஒரு இடத்தில் வருகிறது.
அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித அதிர்வு ஏற்படுகிறது.
அந்த அதிர்வு பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.
பேருந்தில் நாம் பயணம் செய்யும் போது நம்மால் சரியாக எழுத முடிவதில்லை அல்லவா ? அதைப் போன்று தான் இதுவும் செயல்படுகிறது.
அதன் காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.
நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.
அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.
இக்கூற்றுக்கள் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டது சாதாரணமாக அல்ல. நம்மிடம் தற்போதுள்ள தொழில்நுட்பங்களால் அறிய முடியாதவற்றைக் கூட முன்னமே அறிந்த அவர்களின் அறிவு மற்றும் ஞானத்தால். ஆகவே, பகுத்தறிவு என்னும் பெயரில் மெஞ்ஞானம் நீங்கி விஞ்ஞானம் தேடி கடைசியில் இங்கே வருவதை விட நம் முன்னோர் அறிவை மதித்து நடப்பது சாலச் சிறந்தது.
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.