நொடி, நம் எண்ணங்களின் வேகம் செயல்களின் வேகத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகம். விளக்க முடியாத சூழலுக்குள் மாட்டிக் கொண்ட ஒருவனின் நொடிக்கு நொடி வாழ்வு இந்தக் கதை.
நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை எழுத்தாக வடிக்கும் எனது விருப்பத்தின் சிறு படிகளில் ஒன்று இந்தக் கதை. இந்தக் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை , கதையை வாசித்து முடித்ததும் கருத்துக் பெட்டியில் அல்லது எமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
கடந்த பாகத்தில்,
தனது வலது கையால் கம்பியை பிடித்துக்கொண்டு இடதுகையினை புறப்பக்கம் திருப்பி முதுகிலிருந்து தனது தொடைவரை முழுவதுமாக ஒருமுறை உடையை நீவிவிட்டபடி இருக்கையில் அமர்கிறாள். அவளுடைய இடதுகை பின்புறமாக வளைந்து இருப்பதனால், தோள்மூட்டு இணைப்புக்கு கொஞ்சம் கீழிருந்து, அதாவது நாம் சாதாரணமாகப் போடும் கட்டைக் கை ஆடை மறைக்கும் பகுதிக்கு சற்றுக் கீழ் இருந்து அவளுடைய முழங்கை வரையான கை பகுதி இவனுடைய கையில் முழுமையாக உரசுகிறது.
நொடி – 3
“ராட்சசி…”
அழகாலே கட்டிப்போட்டு, தொடுகையாலே உறைய வைத்து, அதற்கு மன்னிப்பும் கேட்டு ஒரு நொடி கூட ஓய்வு கொடுக்காமல் உருகவைக்கும் அழகு ராட்சசி இவள். “
“இதற்காகத் தான் விலகி விலகிப் போய் அவளை விட்டு ஓடி விடுகிறேன் நான். எதற்காகவோ எதனாலோ அவளிடம் பேச என்று நினைத்தால் மட்டும் என்னுடைய உள்ளம் தானாய் போட்டு பிசைந்து எடுக்கிறது. “
“ஓஹோ.. தம்பி கொஞ்சம் ஓவரா போறீங்க..
இது ஃபேமிலி ஸ்டோரி.. ரொமான்டிக் ஸ்டோரி இல்லை…”
வழக்கம்போல அவனுடைய உணர்வுகளை குழப்பி விடுவதில் அவனது மந்தபுத்தி இந்தமுறையும் முழுமூச்சாய் இருந்தது. சென்ற கதையில் அவள் அருகிலேயே அமர்ந்து பொழுது முற்று முழுதாக உணர்ச்சிவசப்பட்டு இருந்த நொடியில், தன்வசமிழந்தவன், சுயநினைவு திரும்பிய பொழுது நினைத்த முதல் எண்ணம் தான் நீங்கள் மேல்கண்ட ரசனை. போன கதையிலேயே பேசப்போவதாக சொன்னவன் அன்று அவள் பக்கத்தில் அமர்ந்தது பேசுவதற்காக தான். முதலாவது கதையில் அவள் கைகள் மீது தான் தன்னுடைய தலை சாய்ந்து இருந்தது என்பதை உணர்ந்த உடனே ஒட்டுமொத்தமாக வெட்கத்தில் குலைந்து போனவன், அந்த நொடியே அந்த ஆசனத்தை விட்டு எழுந்து வேறு ஆசனத்தில் போய் அமர்ந்து கொண்டான். அவளோ ஒன்றுக்கு இரண்டு முறை இறங்குவதற்கு முன்பதாக அவனை திரும்பிப் பார்த்தாள். தனக்கு நடந்ததை முழுமையாக கிரகித்துக் கொள்ள முடியாது இருந்த அவன் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்ததால் அவள் செய்கையை பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.
பழைய கதைகள் எல்லாம் சொல்லி இனி என்ன ஆகப்போகிறது இன்றைக்கு அவளோடு முதன்முதலாக பேசப் போகிறான் அவன். என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் வாருங்கள்.
ஸ்லோ மோஷன் நொடி 15
“மல்லிகை பூவா ? இல்லை லக்ஸ் சோப்பா ? இரண்டும் இல்லை இது ஒரு பழக்கப்பட்ட மணம். இது அடிக்கடி உணர்வது போல் இருக்கிறது. எதுவாக இருக்கும் ?”
“கண்டுபிடித்துவிட்டேன். பேபி சோப். என்ன ஒரு ஒற்றுமை ? ஷூ ஒரே கலரில் போடுகிறோம். சோப் ஒரே வகையில் பாவிக்கிறோம். எல்லாம் எனக்காக என்பது போல வந்திருக்கிறாள் ராட்சசி.”
“எது ? நீ சோப்பு போடுவியா ? அந்த லட்சணம் எனக்குத்தானே தெரியும். எட்டு மணி வேலைக்கு ஏழு மணிக்கு எந்திரிச்சு பத்து நிமிஷத்துல குளிக்கும்போது விரல விட மெல்லிசா தேஞ்சு போன அந்த சோப்பை, கையில ரெண்டு தேயி, நெஞ்சில் இரண்டு தேயி, மூஞ்சில மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அப்புறது. அப்புறம் அவசரஅவசரமாக தண்ணி பக்கெட்டில் பாதி நிலத்தில் ஊத்த ஊத்த அள்ளிக் குளிச்சிட்டு ஓடி வரது.”
ஸ்லோ மோஷன் நொடி 16
இந்த மந்த புத்திக்கு வேற வேலையே இல்ல. கதை எப்ப நல்லா போகுதோ அப்பதான் கண்றாவியா ஏதாவது சொல்லும்.
“எது எப்படியோ இன்னிக்கு அவள்கிட்டபேசியே ஆகணும். எப்படி பேசுறது எதை வைத்து ஆரம்பிக்கிறது ? சம்பந்தமே இல்லாம ஹாய் சொன்னா முறைச்சு பார்த்துட்டானா ? அது சரி வராது. ஹாய் நீங்கதான் அன்னைக்கு நான் தூங்கி விழுந்து போ.. இல்ல இல்ல.. நான் தெரியாமல் தூங்கிட்ட போ.. என்ன எழுப்பி விட்டீங்க…”
“ஆமா அப்படியே போச்சி எடுத்து பால் ஊட்டினாங்க.. குழந்தை தூங்கட்டுனு தாலாட்டு பாடினாங்க. ஏன் இன்னும் கொஞ்சம் ஏதாவது சொல்லு.. பெரிய வீரசாகசம் தானே அது..”
ஸ்லோ மோஷன் நொடி 17
“ஆமால்ல… அது வொர்க் அவுட் ஆகாதுல. என்ன வேற பேசலாம் ? அவ கிட்ட பேசுற அளவுக்கு நம்மள அவளுக்கு தெரிஞ்சு இருக்குமா ? ஒருவேளை நான் பேசப்போவது பார்த்து என்ன தப்பா எடுத்துகிட்டா ? கண்டிப்பா நான் இன்னைக்கு பேசியே தான் ஆகனுமா ? அவ கேட்கத் தயாரா இருக்காளா இல்லையான்னு முதல்ல தெரிஞ்சுக்கணும்.”
“உனக்கு என்ன எழவு தெரிஞ்சுக்கணுமா ஆக இருந்தாலும் தயவு செஞ்சு தலையை கொஞ்சம் திருப்பு. நான் கண் வழியா நியூஸ் எடுத்து உனக்கு மிச்ச டேட்டாவை சொல்றேன்”. – மந்தப்புத்தி உதவ முன்வந்தது.
ஸ்லோ மோஷன் நொடி 18
லேசாக அவள் பக்கம் தனது தலையை திருப்பினான். நீங்கள் எப்பொழுதாவது வேலியிலே இருக்கின்ற ஓணானை பார்த்திருக்கிறீர்களா ? அது ஏதாவது ஒரு விடயத்தை பார்க்க வேண்டுமென்றால் முதலில் இரண்டு கண்களையும் ஓரமாக ஒரே பக்கத்திற்கு திருப்பும். அதுக்குப் பிறகு மெதுவாக யாரும் பார்க்கிறார்களா என்றும் கண்களால் தேடிக்கொண்டே தான் பார்க்க வேண்டிய விடயத்தின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தலையைத் திருப்பும். அந்த ஓணான் தான் இப்பொழுது நம்ம பையன்.அவனுடைய பார்வையிலே, அவள் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த கூந்தலும் கழுத்து மற்றும் தோள் மூட்டு வரையிலான அவளது உடல் பாவனை தெரிந்தது. சற்று கண்ணுடைய கோணத்தை மாற்றியதும் அவளது கைகளில் அவள் கொண்டு செல்கின்ற பையை வைத்திருந்தது தெரிகிறது. அதற்கு மேலே தன்னுடைய இரண்டு கைகளையும் வைத்து தன்னுடைய மொபைலில் எதனையோ செய்து கொண்டிருக்கிறாள்.
ஸ்லோ மோஷன் நொடி 19
“எட்டிப் பாரு ….”
“எது எட்டிப்பார்க்க வா அது எவ்வளவு தப்பான விஷயம் தெரியுமா ? அடுத்தவங்க பர்மிஷன் இல்லாம அடுத்தவங்க போன் எட்டிப் பார்க்கக் கூடாது.”
“ஏண்டா அவளுக்கே தெரியாமா உன் பக்கத்துல உட்கார வைப்பதற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதெல்லாம் நீ பண்ணலாம் அது தப்பு இல்ல. இவ்வளவு தூரம் வந்துட்டு போன பார்க்கிறேன் மட்டும் தப்போ ?”
எனக்குக்கூட மந்த புத்தியுடைய கேள்விகள் சிலவேளைகளில் நியாயம்தான் என்று தோன்றுகிறது.
“சரி சரி ரொம்ப பண்ணாத பார்க்கிறேன் பார்க்கிறேன். மந்த புத்தியை சமாளித்து விட்டு, தன்னுடைய கண்களால் லேசாக நோட்டம் விடுவதற்காக தன்னுடைய முதுகெலும்பை நேராக்கி அவளை விட சற்று உயரமானான்.”
ஸ்லோ மோஷன் நொடி 20
“கொஞ்சம் இரு. முதல் எப்படி இருந்தியோ அதே பொசிஷனுக்கு போ..”
திடீரென்று மந்த புத்தி இட்ட கட்டளையில் நானும் ஒரு நொடி ஆடித்தான் போனேன். ( யே… சேப்ல ஸ்டோரி டைட்டில் நேம் சொல்லியாச்சு )
மந்தபுத்தி இன்றைய தினம் சற்று ஒழுங்காக நடந்து கொள்வ தனால் அதன் பேச்சை மீறாமல் அவனும் முதலை போலவே முதுகெலும்பை வளைத்து சற்று சாதாரணமாகவே அமர்ந்தான்.
“தலைய அவ தோள் பக்கம் திருப்பு…” – அவனும் திரும்பினான்.
ஸ்லோ மோஷன் நொடி 21
“ஐயா ஜாலி .. அவள் உன்ன விட கட்டையாக தான் இருக்கா… கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை.”
குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது எனக்கு. ஆனால் அவனோ சற்று உண்மையிலேயே பதறித் தான் போனான்.
“இங்கே இன்னும் வாய திறந்து ஒரு வார்த்தை சொல்றதுக்கு வழிய காணல.. நீ கல்யாணத்தை பத்தி பேசுற…. உன்ன போய் நம்பி வந்தேன் பாத்தியா… ஆமா என்ன சொல்லணும். உன்ன மாதிரி விகாரமா சிந்திக்கிற ஒரு மூளையை வச்சுக்கிட்டு இவ கிட்ட பேச முடிவெடுத்து அது என் தப்பு தான். முதல்ல அவ போன்ல என்ன தெரியுதுன்னு பாக்கணும் நான்.”
ஸ்லோ மோஷன் நொடி 22
அவன் அவளுடைய போனை பார்த்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், நான் அவனுடைய கருத்துக்கு பலம் சேர்ப்பது நல்லது என நினைக்கிறேன்.
இப்படித்தான் ஒருமுறை நான் கதை எழுதிக் கொண்டிருந்த பொழுது அவனுடைய மந்தபுத்தியிடம் ‘ஆச்சரியப்படும் உணர்வை எழுத்துக்களால் சொல்’ என்றேன். உதாரணமாகச் சொன்னால் சிரிப்பதற்கு ஹி ஹி ஹி ஹி என போட்டால் புரிந்துகொள்வது இலகு. அதேபோல ஆச்சரியப்படுவதற்கு ஏதாவது சொல் என்றேன்.
ஆாாாாாாாா என போட்டு விடு, சரியாக இருக்கும் என்றது.
இப்பொழுது புரிந்து விட்டதா அவன் மந்த புத்தி எவ்வளவு வில்லத்தனமானது என்று….
சரி கதையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அவளுடைய தொலைபேசியில் அன்பே அன்பே (டார்லிங்) பாடலினை தெரிவு செய்து கொண்டு இருக்கிறாள்.
ஸ்லோ மோஷன் நொடி 23
” காதல் என்பது பொல்லாத தீ தான் மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான். கண்கள் முழுதும் நீ வந்த கனவு விடிந்தாலும் முடியாதடி “
அவள் கேட்டுக் கொண்டிருந்த பாடல் ஏனோ இவன் அவளை முதல் முதலாக சந்தித்த தருணத்தை ஞாபகப்படுத்தும் வரிகளை கொண்டிருந்தது. இவனுக்கு புத்துணர்ச்சி பீறிட்டுக் கொண்டது. அவளுடைய பாடல் தெரிவுகளில் இவனுக்கும் காதல் உருவானதை அந்த நொடி உணர்ந்து கொண்டான்..
“பேசியே ஆகவேண்டும் இவளிடம் இன்றைக்கே இப்படி பேசியே ஆகவேண்டும். இவள்தான் என் வாழ்க்கையை நிரப்ப வந்திருக்கிறாள் என்ன நடந்தாலும் இவளை விட்டுவிடக்கூடாது. இன்று பேசாவிட்டால் என்றும் இல்லை.”
ஸ்லோ மோஷன் நொடி 24
“ஹாய்…. உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்குதா என்று எனக்கு தெரியல… கொஞ்ச நாள் முன்னாடி நான் பஸ்ல தெரியாம உங்க மேல தூங்கி விழுந்த டைம்ல நீங்க தான் என்னை எழுப்பிவிட்டீங்க. சாதாரணமா என்ன தள்ளிவிடாம நீங்க உங்க கையால என் தலையை தாங்கி புடிச்சிட்டு இருந்ததை என்னால மறக்கவே முடியாது. அன்னைக்கு நான் ரொம்ப பயந்து போயிருந்ததால உங்ககிட்ட என்ன பேசுறது எனக்கு தெரியல, அதான் நான் எழும்பி போய்டேன்.. அன்னைக்கு அப்புறம் இன்னைக்கு தான் உங்கள பாக்குறதுக்கு எனக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு. உண்மைய சொல்லனும்னா நீங்க என்ன நினைக்கிறீங்க என தெரியாது. ஆனால் நான் உங்களுக்கு அண்டைக்கு தேங்க்ஸ் கூட சொல்லாமல் போனது எனக்கு ஏதோ ஒரு வகையில உறுத்தலாகவே இருந்திச்சு. அதான் இன்னைக்கு தேங்க்ஸ் சொல்ல நினைச்சேன். ஆனா உண்மையிலேயே நீங்க இன்னைக்கு என் பக்கத்தில் உட்கார்ந்தது நான் பேசுறதுக்காகவும் சான்ஸாக அமைஞ்சுருக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. ரொம்ப உளறிக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன பேசுறீங்கனு கூட கேட்காம… மன்னிச்சுக்கோங்க.. நான் இப்படித்தான்.. எனக்கு உங்ககிட்ட பேசணும்னதுல ரொம்பவே பயம் இருந்துகொண்டே இருந்துது. சத்தியமா முதல்தரம் நான் உங்களை பாத்தப்பவே அவ்வளவு அழகா இருந்தீங்க. நான் இதுக்கு முன்னாடி லவ் எல்லாம் பண்ணது இல்ல… எனக்கு இது என்ன மாதிரியான ஃபீலிங் எல்லாம் கூட சொல்ல தெரியாது. ஆனா சத்தியமா நான் பார்த்ததில்லையே என்ன ரொம்ப வித்தியாசமா பீல் பண்ண வச்சது நீங்கதான். எனக்கு எப்படி பேசணும்னு கூட தெரியாது. இப்ப நான் பேசின இந்த விஷயத்துல நீங்க ஏதாவது ஒரு வகையில் ஹர்ட் ஆகி இருந்தா தயவு செஞ்சு என்னை மன்னிச்சுக்கோங்க . உண்மையா சொன்னா பயத்தை விட உங்கமேல அதிகமா மரியாதை தான் இருக்கு.. எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க…. தேங்க்யூ சோ மச்.”
ஸ்லோ மோஷன் நொடி 25
அவனுடைய கையை தொடையில் இருந்து சற்று தூரம் உயர்த்தி அதனை மேலும் கீழுமாக அசைத்து கொண்டிருக்கி றான். ஜன்னலை விட்டு தன்னுடைய பார்வையை அகற்றி இவன் பக்கமாக அவள் திருப்புவதற்கு இந்த செயற்பாடு ஏதுவாக அமைந்தது.
முகத்தில் அசடு வழிய
“ஹாய்……” முற்றிலுமாக உறைந்துபோன மூளை, அவளிடம் முழுதாக ஆட்பட்டிருக்கும் இதயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவன் உதிர்த்த முதல் வார்த்தை.
ஸ்லோ மோஷன் நொடி 24 (ரீவைண்ட்)
இது முதல் வார்த்தையா ? பக்கம் பக்கமாக பேசினான் ? – வாசகர் வாய்ஸ்
அந்த அவ்வளவு வார்த்தைகளும் அவன் பேசவேண்டும் என்று அவனுடைய மந்தபுத்தி அவனுக்கு அள்ளி கொட்டிய வார்த்தைகள்.. பொதுவாகவே ஒரு நொடியில் லட்சம் கோடி விடயங்களை சிந்தித்து விட்டு ஒற்றை வார்த்தையில் முடித்து விடுவது இந்த மனித விலங்கின் வழக்கமாகிப் போய்விட்டது.
பையன் எவ்வளவு பிட்டு எடுத்துக் கொடுத்தான் இந்த லூசு பையன் ஜஸ்ட் ஹாயோட நிறுத்தி தான் பாரேன்.
எனக்குக்கூட சற்று ஆச்சரியமாகவே போய்விட்டது
ஸ்லோ மோஷன் நொடி 26
“ஹாயா ???”
இந்த அதிர்ச்சி கேள்வி அவளுடையது… நம்முடைய பையனுக்கும் மந்தப் புத்திக்கும் அவளுடைய எண்ணங்கள் என்னவென்று தெரியாமல் இருந்தாலும் கூட கதை சொல்லிக்கொண்டிருக்கும் எனக்கு தெரியும். என்ன நடக்கின்றது என்று தெரியாமல் தன்பாட்டில் பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக நீங்கள் உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். திடீரென்று யாரோ ஒருவன் உங்கள் பக்கத்தில் இருந்து ஹாய் சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சமூக வழக்கங்களில் ஹாய் என்பது இன்னும் காம வார்த்தையாக பதிவு செய்யப்படவில்லை என்பதனால் அதனை சாதாரணமாக நீங்களும் திருப்பி அளிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. இதனை உணர்ந்து நீங்கள் மீண்டும் ஹாய் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவள் சொன்ன ஹாயில் மேலே விவரித்த அதிர்ச்சி இருக்கவில்லை அதைவிட பயங்கரமான பேரதிர்ச்சி இருந்தது.
ஏனிந்த பேரதிர்ச்சி என்று தெரியவேண்டுமா ?
ஸ்லோ மோஷன் நொடி 27
“ஜஸ்ட் ஹாய் மட்டும் சொல்றதா இருந்தா வழக்கம்போல பின் ஜன்னல் சீட்டில் போய் உக்காந்துக்கிட்டு இருந்து நான் இறங்கினதுக்கப்புறம் எட்டிப்பார்த்து சொல்லி இருக்கலாமே ? கஷ்டப்பட்டு முன்னால வந்து பக்கத்துல உட்கார தேவலையே ?”
அல்ட்ரா ஸ்லோ மோஷன் நொடி 28
தமிழைவிட ஆங்கிலத்தில் சொல்வது இலகு.
Wait… The, What ?? – இந்த சொற்களுக்கான பொருள், ஒருவர் உங்களிடம் ஒரு விடயத்தை பேசுகிறார். அது முற்றிலும் நீங்கள் எதிர்பார்த்ததற்கும் அல்லது நம்புவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காத வகையில் அமைந்திருந்தால் உங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்த இந்த சொற்றொடர் உதவும். அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கு கூட இது முற்று முழுதான அதிர்ச்சி…
அவள் இவனை திட்டுகிறாள். வெறுமனே ஹாய் சொன்னான் என திட்டுகிறாள். அதுவும் அவன் ஹாய் சொன்னதற்காக ஏசவில்லை. இவ்வளவுக்கும் பிறகு ஹாய் மட்டும் ஏன்டா சொல்லுகிறாய் என திட்டுகிறாள். உண்மையிலேயே அவன் நினைத்தது போல எதுவும் இல்லை. அவள், அவன் பின் சீட்டில் அமர்வதை பார்த்திருக்கிறாள். அவன் அங்கு அமர்ந்திருந்ததற்கான காரணம் கூட சில வேளை தெரிந்திருக்குமோ .. இல்லாவிட்டால் எதற்காக அவள் திட்ட வேண்டும்.
ஆ….. மூளை குழம்புகிறது…..
ஸ்லோ மோஷன் நொடி 29
“ஹே.. என்ன ? என்னையே பாக்குறீங்க ? பதில் சொல்லுங்க…”
இதற்கு மேலும் அவனுடைய நொடிகள் எதுவும் ஸ்லோ மோஷனாக இருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஃப்ரீஸ் ஆகி போனது.
வேறு பாஷையில் சொல்வதென்றால்,
முடிஞ்சு போச்சு.
இது போன்ற வேறு கதைகளை வாசிக்க கதைகள் பகுதிக்கு செல்லுங்கள்
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்