800 திரைப்படமானது தற்போது தமிழ்மக்கள் சமூகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே. கிரிக்கட் விளையாட்டில் 800 விக்கெட் எடுத்து சாதனையாளராக இருக்கும் முத்தையா முரளிதரன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் செய்த ஒரு தவறால் தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒரு நபராக மாறியிருப்பதனால் அவரது படம் வெளிவருவது என்பது மக்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
பிரச்சனையை இரட்டிப்பாக்குமாறு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதில் நடிப்பது யாருக்குமே சுத்தமாகப் பிடிக்கவில்லை.அவர் அதில் நடிக்கக் கூடாது என்று பலரும் கேட்டுக் கொள்கின்றனர். மக்களுடைய ஆதரவாலேயே வளர்ந்த சேதுபதிக்கு இந்த நிலை நிச்சயமாக சங்கடமானது. அவர் இதற்கு முன்னரும் தமிழ் மக்களுக்கு எதிரான எந்த செயலிலும் இறங்க மாட்டேன் என்று வாக்களித்ததை பலரும் தற்போது நினைவுபடுத்தி அவரை இந்த படத்தை விட்டு விடச்செய்ய முடியுமான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சனையில் எந்தப் பக்கம் பேசினாலும் மக்கள் முடக்குகின்றனர். இது அரசியல் படமல்ல, விளையாட்டுப் படம் என்று சொன்னாலும் அவர்கள், ஒருவர் செய்த தவறுகளை மறைத்து படமெடுத்தால் அடுத்த சந்ததி ஏமாந்து போகும் என்று கூறுகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக தற்போது இயக்குனர் பாரதி ராஜா தனது டுவிட்டர் பதிவை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.
அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,
வணக்கம்.
மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.
அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.
நிற்க.
தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.
நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த
முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.
விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள்
கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?
எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப்
பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.
அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.
அவர்களின் வேதனையும் வலியும் புரியும். அவர்கள் உங்கள் மீது
வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்
இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக
வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?
எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.
தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.
பின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.
800- திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம். இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள்.
துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா ? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள். பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு
வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக்கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா. ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.
இவ்வாறு அவர் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
800 படம் ஏன் எதிர்க்கப்படுகிறது ?
மக்கள் ஏன் 800 க்கு எதிர்ப்பை வெளியிடுகிறார்கள் என்பது தொடர்பாக தேடித் பார்த்தபோது, இது இலங்கையின் இனவாதப் பிரச்சனை தொடர்பானது எனத் தெரிய வந்தது. மேலோட்டமாக சொன்னால்,
“இந்த வெளியீடு ராஜபக்ஸ சார்பு கருத்துக்களை நினைவு கூறும் முறையில் அமைந்திருப்பதாகவும், கடந்த காலங்களில் இலங்கை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு முரளி தொடர்ச்சியாக அளித்த ஆதரவை வெளிக்காட்டுவதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் பலர் இலங்கைக் கொடியுடன் பொறிக்கப்பட்ட வெள்ளை சட்டை எவ்வாறு அணிய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர், தமிழர்களையும் தமிழ் மீனவர்களையும் படுகொலை செய்த ஒரு அரசாங்கத்திற்காக நிற்பதை எதிர்க்கும் வகையில் இந்த எதிர்ப்பு அமைந்துள்ளது. படத்தில் இருந்து வெளியேற சேதுபதியை வலியுறுத்தி இதே போன்ற செய்திகளால் சமூக ஊடகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ராஜபக்ஸ சகோதரர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் தற்போது ஆட்சிக்குத் திரும்பியுள்ளதும் சர்ச்சையை தூண்டியுள்ளது.” என Outlook.india பக்கம் தெரிவித்துள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? வெறும் விளையாட்டுத் துறை படமாக இதனை பார்த்து நிகரில்லாத சாதனை செய்த ஒருவரின் படத்தை வெளியிட வேண்டுமா ? அல்லது அவர் ஒரு இனத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்காக அப்படம் புறக்கணிக்கப்பட வேண்டுமா ?
இதுபோன்ற புதின செய்திகளை அறிய எம்மை எமது பேஸ்புக் பக்கத்தில் தொடரவும்
தமிழ் மக்களுடைய பழங்காலம் பற்றிய அரசியல்சாரா கட்டுரைகளை வாசிக்க எமது கலாச்சாரத் தகவல்கள் பகுதிக்கு செல்லவும். சினிமா தகவல்களை அறிய சினிமா பகுதிக்கு செல்லவும்.