சார்லி சாப்ளின்..
சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை..!!
சார்லி சாப்ளின் திரைப்படங்கள் மூலம் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தாலும், இவரது வாழ்க்கை சற்று கடினமான வாழ்க்கையாகவே அமைந்தது. இவரது திருமணங்கள் அனைத்தும் விவாகரத்திலேயே சென்று முடிந்தது. மேலும், இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ் பலமுறை அவரது தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சார்லி சாப்ளின் – மில்ட்ரெட் ஹாரிஸ்
16 வயதான மில்ட்ரெட் ஹாரிஸ் 1918ஆம் ஆண்டில் சார்லி சாப்ளினை லாஸ் ஏஞ்சல்ஸில் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
1919ல் இத் தம்பதியருக்கு பிறந்த குழந்தை, பிறந்த மூன்று நாட்களில் இறந்தது. அதன் பின் 1920ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.
சார்லி சாப்ளின் – லிதா கிரே
லிதா கிரே சார்லி சாப்ளினை தனது எட்டு வயதில் ஒரு ஹாலிவுட் கபேவில் முதன் முதலில் சந்தித்தார். தனது 12வது வயதில் திரைப்படத்தில் சார்லி சாப்ளினுடன் பணியாற்றினார். அதன் பின் 15வது வயதில் தி கோல்ட் ரஷ் படத்திற்காக அழகி தேர்வு நடைபெறுவதை அறிந்து சார்லி சாப்ளினை மீண்டும் சந்தித்தார்.
லிதா கிரே மீது காதல் கொண்ட சார்லி சாப்ளின் 1924ஆம் ஆண்டு இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சார்லஸ் சாப்ளின் ஜூனியர் மற்றும் சிட்னி சாப்ளின் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.
இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே பிரச்சனையாக இருந்தது. அதன் பின் 1927ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.
சார்லி சாப்ளின் – பாலேட் கொடார்டு
சார்லி சாப்ளின் பாலேட் கொடார்டு என்பவரை 1936ஆம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக சென்ற திருமண வாழ்க்கை விவாகரத்தில் முறிந்தது.
சார்லி சாப்ளின் – ஓ நீல்
1942ஆம் ஆண்டில், அடுத்த படத்திற்காக முன்னணி நடிகையை தேடி கொண்டிருக்கும் சமயத்தில் வாலஸ் என்பவர் ஓ நீல்லை சார்லி சாப்ளினுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் காதல் வாழ்க்கையில் இணைந்தனர். அதன்பின் 1943ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவ்விருவருக்கும் எட்டு குழந்தைகள் பிறந்தனர்.
- ஜெரால்டின் லே
- மைக்கேல் ஜான்
- ஜோசபின் ஹன்னா
- விக்டோரியா
- யூஜின் அந்தோணி
- ஜேன் சிசில்
- அன்னெட் எமிலி
- கிறிஸ்டோபர் ஜேம்ஸ்
சார்லி சாப்ளின், 1977ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் நாளில் தனது 88வது வயதில் காலமானார். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே செய்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது. இவரது உடல் வார்ட் நகரிலுள்ள கார்சியர்-சுர்-வேவே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சாப்ளினின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில், அவரது தீவிர ரசிகையான உக்ரைன் நாட்டு விண்வெளி வீராங்கனையான லியூட்மீலா கரச்கினா, ஒரு எரிகல்லுக்கு 3623 சாப்ளின் எனப் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
சார்லி சாப்ளின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் :
சார்லி சாப்ளினுடைய கண்களின் நிறம் நீல நிறமாக இருந்தது. இவர் கருப்பு, வெள்ளை படங்களில் மட்டுமே நடித்திருந்ததால் இது யாருக்கும் தெரியாத விஷயமாக இருந்துவிட்டது.
சாப்ளினின் புகழினால் சாப்ளினை போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒருமுறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் ரகசியமாக பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது.
1985ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவப்படத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது.
1994ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார்.
1992ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை ‘சாப்ளின்” என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர் எனும் கருத்துக்கணிப்பில் உலகத்தின் தலைசிறந்த 20 நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளின் தேர்வு செய்யப்பட்டார்.
1975ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் அரசி சாப்ளினுக்கு ‘சர்” பட்டம் அளித்தார்.
உலகம் போற்றும் நகைச்சுவை நாயகன்…
தன் மீசையை நகைச்சுவையாக காட்டி அனைவரையும் சிரிக்க வைத்தவர்…
துன்பத்தை மறைத்து சிரிப்பால் உலகத்தை வலம் வந்தவர்…
தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையை பரிசாக அளித்தவர்…
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்…
- உலக பணக்காரர்களின் வரிசையில் நானிருந்தாலும், என்னால் ஏழையாகத்தான் சிந்திக்க முடிகிறது. பணம் இடையில் வந்தது. ஆனால், ஏழ்மை என் ரத்தத்தில் ஊறியது.
- மழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், அப்போது தான் நான் அழுவது மற்றவர்களுக்கு தெரியாது.
- நிலைக்கண்ணாடி போன்ற நல்ல நண்பன் எனக்கு வேறு யாரும் கிடையாது. ஏனென்றால் நான் அழும்போது அதற்கு சிரிக்க தெரியாது.
- உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது.
- வாழ்க்கை வெகுதொலைவில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சிகரமானது தான். அருகிலிருந்து பார்க்கும்போது தான் அதில் உள்ள சோகத்தை நம்மால் கவனிக்க முடியும்.
- இந்த உலகில் எதுவுமே நிரந்தரமானதல்ல, நமக்கு வரும் துன்பங்கள் உட்பட.
- உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை.
- போலிக்குத்தான் பரிசும், பாராட்டும்… உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே…!
- ஆசைப்படுவதை மறந்து விடு, ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே…!
- நான் புரட்சியாளன் அல்ல, ஆனால் மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன்.
- என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கும்.
- நகைச்சுவை என்பது தனக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் இருக்க வேண்டும்.
- வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி எளிதாக எடுத்துக்கொள். அப்பொழுதுதான் வெற்றியடைய முடியும்.
- பணம் பணம் என்று மனிதர்கள் உலகத்தில் ஓடி உழைக்கிறார்கள். ஆனால் நிம்மதியை தொலைத்து விடுகிறார்கள்.
- அறிவுக் கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும், கண்ணியமுமே…
- நாம் மிக அதிக அளவு சிந்திக்கிறோம். ஆனால் மிக மிக குறைவான அளவுக்கே அக்கறை கொள்கிறோம்.
- வாழ்க்கை அழகானதும், அற்புதமானதும் கூட ஜெல்லி மீன் போல..
- நீ எப்போதும் வானவில்லை காண முடியாது உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்.
- ஒரு மனிதனின் உண்மையான சொரூபம் அவன் குடித்திருக்கும்போது தெரிய வரும்.
- மதிப்புடைய வாழ்க்கையை தேடி கண்டுபிடிக்கலாம்… உன் புன்சிரிப்பால்.
பன்முகத்திறமை :
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி சிறந்த கதையாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் ஆகிய பணிகளையும் இடைவிடாமல் செய்து வந்தார் சாப்ளின்.
தனக்கென ஓர் அடையாளம் :
கிழிந்த கோட்டு, தலைக்கு பொருந்தாததால் கையில் வைத்திருக்கும் தொப்பி, வித்தியாசமான நடை, வலிகளை மறைக்கும் புன்னகை என்று தனக்கான அடையாளத்தை சார்லி சாப்ளின் உருவாக்கிக் கொண்டார்.
எளிமையானவர்:
பெரும் பணக்காரராக இருந்த போதிலும் கூட, சிறிய ஹோட்டல்களில் தங்கும் பழக்கம் கொண்டிருந்தார் சாப்ளின்
சதுரங்க ஆட்டக்காரர் :
சாப்ளின் சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல சதுரங்க ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார்.
மௌன படங்களின் வாயிலாக வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின். சாப்ளினின் நடிப்பு எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும். காலம் கடந்து இப்போதும் உலகம் முழுவதும் சாப்ளினுக்கும், அவரது படங்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.மனித குலத்தின் மகத்தான சாதனை படைத்தவர்…!!
சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு பகுதி 1 ஐ பார்க்க இங்கே செல்லவும்
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்…