பொறுப்புத் துறப்பு : கீழ்க்கண்ட கட்டுரையில் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் அனைத்துமே நாஸா மற்றும் அப்பிள் நிறுவனங்களுக்காக வேலை செய்து விட்டு தற்போது சுயமாக youtube பக்கத்தை நடத்தும் மார்க் ரொப்பர் என்பவர் சைவ BBQ மற்றும் மாமிசங்கள் பற்றி செய்த காணொளியை அடிப்படியாகக் கொண்டவை.
சைவ BBQ மற்றும் மாமிசம் ஏன் தேவை ?
மிக எளிமையான கேள்வி அல்ல அது. நம்ப முடியாவிட்டாலும் மனிதன் மாமிச உணவுகளுக்காக இயற்கையில் ஏற்படுத்தியிருக்கும் சமநிலைக் குழப்பம் மிகப்பாரியது.புற்களையே பார்க்காத பசுமாடுகள், ஒரு அடி கூட நகராமல் வளர்ந்த பன்றிகள், அசையக்கூட இடமில்லாமல் பண்ணையாக்கப்பட்டு கழிவுகளோடு சேர்ந்து வளர்ந்த கோழிகள். வெறுமனே லாபத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, மிருகங்களின் நலன் தொடர்பாக சிறிதும் கருதாத பண்ணைகளில் இறைச்சிகாகவே வளர்க்கப்படும் இவ்விலங்குகள் மற்றும் நம் மாமிச ஆசைதான் காரணம். முழுமையான விளக்கம் பின்னர் பார்ப்போம்.
அதெப்படி சாத்தியம் ?
Beyond Meat மற்றும் Impossible ஆகிய இரு நிறுவனங்கள் இதனைச் சாதித்துள்ளன. நீங்கள் விரும்பும் அதே வடிவம், சுவை, மணம் மற்றும் அதே அளவு புரதச்சத்தும் உள்ளவாறு BBQ (Patty) பட்டிகளை தயாரிக்கிறார்கள். Beyond meat நிறுவனமானது பல ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு இந்த ஆய்வினை செய்து வருகிறது. மாமிச விரும்பிகள் உண்மையான விலங்கைத் தவிர வேறெதனையும் தியாகம் செய்யாமல் உண்பதற்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் உருவாக்குகிறார்கள். நிறத்துக்காக அப்பிள்,தக்காளி, பீட்ரூட், மாதுளம்பழம் ஆகியவற்றையும், தேங்காய் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணையை பயன்படுத்திக் கொழுப்பு வடியும் உணர்வைக் கொண்டு வருகிறார்கள்.உருளைக்கிழங்கு காபோவைதரேட்டுக்கும், சோளம், பருப்பு, அவரை, ஓட்ஸ் மற்றும் பயறு புரதத்துக்கும் பயன்படுகிறது. இதில் கொழுப்பு இல்லை ஆயினும் தேங்காய் எண்ணெய் வடி கொழுப்பு உள்ளது.
Impossible நிறுவனத்தில் சோயாப் புரதத்தில் சிறிது நீரைச் சேர்த்து அதில் உருளைக்கிழங்கு புரதத்தைச் சேர்த்து, அதற்குள் ஈமோகுளோபினை சேர்க்கிறார்கள். (எல்லாத் தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் அத்தியாவசியக் கலம்). இதுதான் மாமிச சுவையைக் கொடுக்கிறது. அதற்குப் பின் செலுலோசுப் பசையால் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து அதற்குள் தேங்காய்ப் பூவையும் சேர்க்கிறார்கள்.
பர்கர் பட்டி மட்டுமல்ல, சைவ சொசெஜஸ் கூடத் தயாரிக்கிறார்கள்,
இவற்றை அசைவ பர்கர் என்று சொல்லிக் கொடுத்தால் நம்பி உண்டு விடுவார்கள். சந்தேகமே வராது என்கிறார் மார்க் ரொப்பர். சொல்வது மட்டுமல்லாமல் தனது ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழைத்து இந்த உணவைப் பகிர்ந்து. அவர்கள் உண்ட பின் அதில் மாமிசமில்லை என சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார்.
கட்டாயம் மாமிசம் வேண்டுமா ?
இந்த உலகின் மிகப் பெரிய மாமிசவெறியர் கூட தன்னுடைய உடலின் புரதத்தில் 51 % ஐ தானியங்களால்தான் பெறுகிறார். சைவ உணவு உண்பதால் உங்களுடைய திறன் மற்றும் செயற்பாடு அதிகரிக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு மூன்று வாரங்களில் 30 % செயற்திறன் அதிகரிப்பைப் பெற்றுத்தருகிறது சைவ உணவு. ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகர், கைரி யூரோவின், லூஸ் ஹமில்டன் மற்றும் செரீனா, வீனஸ் வில்லியம் சகோதரிகள் போன்ற இன்னும் பல விளையாட்டு மற்றும் ஆக்ஷன் வீரர்களுக்கு சைவம் போதுமாக இருக்கின்றதென்றால் நிச்சயம் நம் அனைவருக்கும் தேவையான சக்தியை அது கொடுக்கும். சரி இருக்கட்டும் அனால் நான் ஏன் மாமிசத்தை குறைத்து அதற்குப் பதிலாக மாமிசம் போல உள்ள சைவ பர்கர் வேண்டும் எனக் கேட்கிறீர்களா ?
உலகத்துக்கு நல்லது
நான் மட்டும் சொல்லவில்லை. நாஸா விஞ்ஞானியும், உலகின் தலை சிறந்த வீரர்களும், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் கூட சொல்கிறார். ஆம். பில் கேட்ஸ் இதைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா ? இந்த உலகத்தின் வாயு மண்டல மாசாக்கம் மற்றும் ஓசோன் படையில் நலிவு ஏற்படக் காரணமாக இருக்கும் பச்சை வீட்டு வாயுக்கள் இந்த உலகில் உள்ள எல்லா தரை வாகனங்கள், புகையிரதங்கள்,விமானங்கள் மற்றும் கப்பல்களால் வெளியிடப்படுவதை விட உணவுக்காக பண்ணைகளில் அடைத்து வளர்க்கப்படும் மிருகங்களின் கழிவுகளால் அதிகம் வெளி வருகிறது. அதாவது நீங்கள் ஒரு பசுவை சாப்பிடுவதற்காக உலகின் மொத்தத்தில் ஒரு சிறிய பாகத்தை அழிக்க வேண்டி உள்ளது.
அடுத்ததாக மனிதர்கள் நாம் உணவில் இருந்து பெறுவதாக நினைக்கும் சக்தி உண்மையிலேயே சூரிய சக்திதான். சூரியன் தாவரங்களுக்கு கொடுத்து, தாவரத்தை விலங்கு உண்டு, பின் அந்த விலங்கை நாம் உண்டு சக்தி பெறுகிறோம். ஆனால் இங்கு நாம் நேரடியாக தாவரத்தில் இருந்து சக்தியை பெற்றால் நம்முடைய உடலில் சேரும் சக்தியின் அளவு அதிகமாக இருக்கும். தேவையில்லாமல் வெறும் சுவைக்காக நடுவில் ஒரு விலங்கை கொண்டுவந்து பின் கொன்று உண்ணும் செயல் வீணானது.
எவ்வளவு உண்டாலும் நம் உடலில் உள்ள கலோரிகளில் 10 வீதம் மட்டுமே மாமிசத்தால் வரும். ஏனைய 90 வீதம் தாவரங்கள்தான். ஆனால் அந்த 10 வீதத்துகாக நாம் செலவழிக்க வேண்டிய வளங்கள் எக்கச்சக்கம். அதாவது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் பண்ணை வளர்ப்புக்காக அர்ப்பணித்தால் அதன் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 1/3 பங்கு பண்ணை வளர்ப்பு மிருகங்களுக்காகவே சென்று விடும். மேலதிக 1/5 பங்கு நிலம் அவை உண்பதற்கான தாவரங்களை பயிர் செய்ய செலவாகும். நினைவிருக்கட்டும் எல்லாம் 10 % சக்திக்காக. அது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் உண்ணும் ஒட்டு மொத்த தாவரங்களை பயிரிட நமக்கு செல்லும் நில அளவு விலங்குகளுக்காக பயிரிடுவதன் அரைவாசி. சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு வளங்களை வீணாக்குகின்றோம். 24 இறைச்சி BBQ பட்டிகளை செய்ய எடுக்கும் நீரின் அளவு ஒரு பெரிய நீர்த்தடாகத்தை நிரப்பப் போதுமானது.
ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த அளவு நீரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட சிக்கன் பட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம் சாப்பிடுகிறேன் எனில் நான் அதன் மூலம் 12 நாட்கள் உயிர் வாழலாம். அதே நேரத்தில் அதே அளவு நீரைப் பயன்படுத்தி பாண் மற்றும் கச்சான் பட்டர் தயாரித்தால் நான் ஒரு நாளைக்கு இரண்டு வீதம் உண்டு, ஒரு வருடம் உயிர் வாழும் அளவு தயாரிக்கலாம். இரண்டிலும் ஒரே அளவு கலோரி மற்றும் புரதம்தான் பாண் மற்றும் கச்சான் எண்ணெயிலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
எல்லா நாடுகளும் தமது பண்ணை வளர்ப்புக்கு செலவழிக்கும் அளவு தானியங்களைக் கொண்டு 3.5 பில்லியன் மக்களுக்கு உணவளிக்கலாம்.
பில் கேட்ஸ் கருத்துப்படி, மக்கள் நடுத்தர வர்க்கத்தை நோக்கி நகர நகர அதிக மாமிசம் உண்பதாகவும் அதனை பெருமையாக நினைப்பதாகவும் குறிப்பிடுகிறார். உண்மைதான். கடைசி 5௦ வருடங்களில் மாத்திரம் 400,000 டன்களாக இருந்த மாமிச கொள்வனவு 1,300,000 டன்களாக அதிகரித்துள்ளது. இது உலகத்தின் சமநிலை தாங்கும் சக்தியை விட அதிகம்.
உங்களுக்கான பண்ணையை வளர்க்க மேயும் நிலம் தேவை என்பதற்காக நமக்கெல்லாம் தாய் போல ஒட்சிசன் அளிக்கும் அமேசானின் 20 % எரித்து தரிசு நிலமாக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் காலநிலை மோசமாகிக்கொண்டே போகின்றது.
என்ன செய்யலாம் ?
எந்த சுவை வித்தியாசமும் இல்லாமல் உங்களை முழுமையாக திருப்தி படுத்தக்கூடிய மாற்றீடுகள் கைவசம் உள்ளன. நாம் எல்லோரும் அதனைப் பயன்படுத்தத் தொடங்கினால், அதற்கான கேள்வி கூடும் போது உற்பத்தி பெருகி மாமிச உணவை விட குறைந்த விலையில் இவை கிடைக்கும். இது உங்களுக்கு மாமிசம் உண்ணும் அதே உணர்வை அளிப்பதோடு அந்த சுவையையும் கொடுக்கும். இது உங்களுக்கும், விலங்குகளுக்கும், இயற்கைக்கும் மிகவும் நல்லது. செலவும் குறையும். மாமிசத்துக்கான கேள்வி கூடக் கூட அழிவு கூடும். ஆகவே, ஒரு நாளாவது மாமிசம் உண்ணாமல் இருப்பது, இவ்வாறான சைவ மாற்றீடுகளை வரவேற்பதோடு பரப்பவும் செய்யலாம்.
உலகம் பற்றி அக்கறை கொண்டவரா நீங்கள் ? செயற்கை நுண்ணறிவால் உலகத்துக்கு வரும் ஆபத்துப் பற்றி பாருங்கள்.