“ஊர் முழுவதும் நிமிர்ந்து நிற்கும் அழகிய இராட்டினங்களில் புத்தருடைய வாழ்கை வரலாறு இருக்கும். 6 அடி, 10 அடி உயரத்தில் வித விதமான கூடுகள் அமைக்கப்படும். ஒவ்வொரு முறையும் நண்பர்களோடும் குடும்பத்தோடும், இரவிரவாக அனைத்து தன்சல்களுக்கும் (உணவு தானம்) சென்றுவிட்டு விடிந்த பின் வீடு திரும்பும் அந்த அனுபவம் இந்த முறை இல்லை.”
புத்தர் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வழக்கம் 1950 இலேயே ஆரம்பித்தது. அந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பௌத்த கூட்டுறவின் கூட்டத்தில் வெசாக் தினத்தை புத்தரின் பிறந்த நாளாக அறிவிக்கப்பட்டது.பௌத்த சாசனங்களின் படி, புத்தரின் பிறந்த நாள், பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்தாலும் நேபாளின் மகாராஜா வெசாக் தினத்தை விடுமுறையாக அறிவித்ததை முன்னிட்டு, பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் சிறுபான்மையாகவோ அல்லது பெரும்பான்மையகவோ உள்ள எந்த ஒரு நாட்டிலும் மே மாதத்தில் அனைவரும் பூரணை தினத்தை வெசாக் விடுமுறையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
வெசாக் தினமானது, தமிழ் நாட்காட்டிகளின் படி விசாக தினமாக குறிப்பிடப்படுகிறது. இந்த 2020 ஆம் ஆண்டு தமிழர்களின் பிதிர்க்கடன் தீர்க்கும் தினமான சித்திரா பௌர்ணமி தினத்துடன் வெசாக் ஆனது இன்று (07.05.2020) கொண்டாடப்படுகிறது.சீனாவில் லாபா திருவிழா எனவும், ஜப்பானில் ரோஹாசஸ்டு என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
வெசாக் தினத்தன்று உலகம் முழுவதிலிருக்கும் மக்கள், புத்த பகாவனுடைய பிறப்பு, ஞானம் மற்றும் முக்தியை பிரதிபலிக்கும் வகையிலான சமய மற்றும் கலாசார நிகழ்வுகளில் ஈடுபடுவர். அந்த வகையில் தியானம்,புத்தரின் எட்டு கட்டளைகள் தொடர்பாக அவதானம் செலுத்தல், சைவ உணவுண்ணல்,தானமளித்தல், வெசாக் கூடுகள் கொண்டு அலங்கரித்தல் மற்றும் புத்தருக்கு அபிஷேகம் செய்வித்தல் என்பன கடைப்பிடிக்கப்படும்.
பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில், வெசாக் இராட்டின தோரணங்கள் அமைக்கப்படும். இவை புத்தரின் வாழ்க்கை வட்டம் தொடர்பானவையாக அமையும். கட்டுமானப்பணிகள் தொடங்கும் நாளில் இருந்து தோரணத்தின் மத்தியில் காட்டப்படும் புத்தர் சிலையின் தலையானது மூடப்பட்டிருக்கும். அதுவே வெசாக் தினமன்று கோலாகலமாக திறந்து வைக்கப்படும்
விகாரைகளில் சிறப்பு பூசைகள் இடம்பெறும். அவற்றை முடித்துக்கொண்டு இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு போகும் போது வழி முழுவதும் நிறைந்திருக்கும் உணவு, மென்பான, ஐஸ்க்ரீம் தானங்களில் சென்று உண்ணுதல் என மிகவும் சந்தோஷமான முறையில் கொண்டாடப்படும் ஒரு விடுமுறை தினம்தான் இந்த வெசாக்.
image source:https://srilankamirror.com/news/14101-buddhists-worldwide-celebrate-vesak-today