அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள பெர்சிவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் இரு பாறை மாதிரிகளைச்
சேகரித்திருப்பது விஞ்ஞானிகளை உற்சாகமடையச் செய்திருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது.
செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்குப் பகுதியில் விண்கலத்தின் ரோவர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பாறையைக் குடைந்து இரு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இப்போது வறண்ட பகுதியாக ஜெசேரோ பள்ளத்தாக்கு காட்சியளித்தாலும் ஒரு காலத்தில் நதிப்படுகையாக அது இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அதனால் தான் அப்பள்ளத்தாக்கு ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பள்ளத்தாக்கின் ராசெட் என்ற பாறைத் திட்டிலிருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்பாறைத் திட்டில் உப்புப் படிவத்தை பெர்சிவரன்ஸ்,குழு ஏற்கெனவே கண்டறிந்துள்ளது.
அந்தப் பாறைகளில் உப்புத் தாதுக்கள் இருந்தால்.கனிமங்கள் வழியாகத் தண்ணீர் வழிந்தோடிய போது அந்தப் பாறைகள் உருவாகியிருக்கலாம் அல்லது நீர் ஆவியாகும் போது அவை உருவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சேகரிக்கப்பட்டுள்ள பாறை மாதிரிகளிலும் உப்புத் தாதுக்கள் உள்ளதா என்பது ஆய்வுக்குப் பின் தான் தெரிய வரும். அவ்வாறு இருந்தால் செவ்வாய் கிரகத்தின் பழங்கால காலநிலை மற்றும் வாழ்விடம் பற்றிய உண்மைகளை அறிவதற்கு அவை பெரிதும் உதவியாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்தப் பாறை மாதிரிகள் 2030ஆம் ஆண்டுதான் பூமிக்கு கொண்டுவரப்பட உள்ளன. பூமியில் உள்ள ஆய்வகத்தில் அந்தப் பாறை மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கு குறித்த ஏராளமான ஆச்சரியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.