கவனிக்கும் பழக்கம் என்பது ஒருவருக்கு மிகவும் முக்கியமானது, கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பண்பும் கூட, ஒருவர் பேசும் போது அதை கவனிக்காமல் என்ன பேசினால் நமக்கென்ன என்று இருப்பது மிகவும் மோசமான பழக்கம் என்று தான் கூற வேண்டும்.
இது பள்ளிக்கூடங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது. ஆசிரியர் கூறுவதை நன்றாக கவனித்தால் தான் பாடத்தை புரிந்து கொள்ள முடியும் அதை விடுத்து கவனிப்பதை போன்று பாவனை செய்தால் நஷ்டம் நமக்குத்தான் அதற்கான விளைவு பரீட்சை பெறுபேறுகளில் தான் தெரியும்.
அங்கிருந்து நாம் பழகும் பழக்கம் தான் வீடுகளிலும் சரி தொழில் புரியும் இடங்களிலும் சரி தொடர்கிறது. பெரும்பாலும் ஆரம்பத்தில் கவனிக்கும் பண்பு இல்லாதவர் பிறகு எங்கேயும் எப்போதும் மற்றவர்கள் கூறும் விடயங்களை கவனிக்கத் தவறுபவர்களாகவே இருப்பார்கள்.
தொழில்புரியும் இடங்களை எடுத்துக்கொண்டால் குழுவாக சேர்ந்து வேலை செய்வது தான் அதிகம் அதில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதும் ஒருவரது பேச்சுக்கு இன்னொருவர் செவி சாய்ப்பது குழு ஒற்றுமையை நிலை நிறுத்துவதும் மிகமுக்கியம்.
அனைவருக்கும் சமமான முன்னுரிமை கொடுக்க வேண்டும் இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஒருவர் கூறுவதை இன்னொருவர் செவிசாய்க்க வேண்டும். அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும் குழு முயற்சிகளில் இது மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. சரியாக கவனிக்காமையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கான அடித்தளமாக காணப்படுகின்றது.
அது மாத்திரமன்றி தலைமைத்துவப் பண்புக்கு கண்டிப்பாக மற்றவர்களின் கருத்துகளை கூர்ந்து கேட்கும் திறன் வேண்டும். அடுத்து வீடுகளை எடுத்துக் கொண்டால் கணவன் மனைவியாகட்டும் பிள்ளைகளாகட்டும் பெரும்பாலும் கூறும் பிரச்சனை என்னவென்றால் கணவனோ மனைவியோ பிள்ளையோ தான் கூறுவதை இன்னொருவர் காதில் வாங்கிக் கொள்வதில்லை என்பதுதான்.
ஒரு பிரச்சனை எழுகிறது என்றால் அது பற்றிய விடயத்தை காது கொடுத்து கேட்டு அறிந்து கொண்டாலே பாதி பிரச்சனைகள் முடிந்து விடும் ஆனால் அதைத்தான் பலர் செய்ய மறுக்கின்றனர்.
பிள்ளைகள் கூட பள்ளிக்கூடத்தில் நடந்த விடயங்களை ஆவலாக கூற வரும்போது வேலை செய்து கொண்டே அது அதை வேண்டா வெறுப்பாக காதில் கொஞ்சம் கூட வாங்கிக் கொள்ளாமல் இருக்கும் பெற்றோர்கள் அதிகம்.
காலப்போக்கில் தாம் கூறுவதை யாரும் கேட்பதில்லை என்பதாலேயே பிள்ளைகள் அவர்களிடம் எந்த ஒரு விடயத்தையும் கூறாமல் விட்டு விடுவார்கள் இது பிற்காலத்தில் பாரிய பிரச்சனையாக மாறிவிடும்.
ஒரு விடயத்தை கூறுபவர் ஆக நாம் இருந்து மற்றவர் அதை கேட்காமல் அலட்சியம் செய்தால் நமது மனநிலை எவ்வாறு இருக்கும்? அதையே நாம் மற்றவருக்கு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவர் நம்மிடம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியினூடகவோ பேச முயற்சிக்கும் போது அதிக வேலை இருக்கிறது இப்போது பேச நேரமில்லை என்று கூறுபவர்கள் தான் அதிகமே தவிர, அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை கேட்க யாரும் தயாராக இல்லை.
வேலைகளுக்கு மத்தியில் ஐந்து நிமிடங்களும் மற்றவர்களுக்காக ஒதுக்குவதில் தவறில்லையே நாம் ஒரு விடயத்தையோ அல்லது மற்றவர்கள் கூறும் கருத்துக்களையோ கவனிக்கும் பொழுது நம்மால் பல விடயங்களை உள்வாங்கிக் கொள்ள முடியும்.
ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு பேசும் திறன் இருக்க வேண்டுமோ அதே அளவு கவனிக்கும் திறனும் இருக்க வேண்டும் மற்றவர்கள் கூறுவதை கவனிக்கப் பழகுவோம்.