இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..
இந்நாட்களில் என்னென்ன செயல்களை செய்யலாம்?
வளர்பிறை, தேய்பிறையில் செய்ய வேண்டியவை..! செய்யக்கூடாதவை..!!
வளர்பிறை, தேய்பிறை என்பது ஒவ்வொரு மாதமும் வருகிறது. அதுமட்டுமின்றி வளர்பிறைக்கு மக்கள் முக்கியத்துவம் தருகின்றனர். வளர்பிறையில் என்ன செய்ய வேண்டும்? தேய்பிறையில் என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
வளர்பிறை
சுக்ல பட்சம் என்றால் வளர்பிறை காலம். அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதியிலிருந்து பௌர்ணமி நாள் வரை வருகின்ற 15 நாட்களை சுக்ல பட்சம் அதாவது வளர்பிறை காலம் என்று அழைக்கிறோம்.
வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும்.
வளர்பிறையை திருமணம், கிரகப்பிரவேசம் செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள். வளர்பிறை போல வளர்ந்து, கணவன்-மனைவி இருவரும் 16 செல்வங்களுடன் வாழ வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள்.
கிரகப்பிரவேசம் செய்யும் போதும் வளர்பிறையை பார்ப்பது ஏனென்றால், குடிபுகும் வீட்டில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
குழந்தைகளை கல்விக்கூடத்தில் சேர்ப்பது, வியாபாரம் தொடங்குவது, வீடுகட்ட தொடங்குவது போன்ற முக்கியமான செயல்களுக்கு வளர்பிறைதான் முக்கியம்.
வளர்பிறை திரியோதசியில் பிரதோஷ வழிபாட்டிற்கு பூஜை சாமான்கள் வாங்கி கொடுப்பது, பிரதோஷ வேளை முழுவதும் கர்ப்ப கிரகம் அருகில் அமர்ந்தபடி சிவ தியானம் செய்து வருவது பாவங்களை போக்கும். சண்டை சச்சரவுகளில் இருந்து இந்நாளில் ஒதுங்கி இருப்பது நலம் தரும்.
தேய்பிறை
கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை காலம். பௌர்ணமிக்கு அடுத்த நாள் வரும் பிரதமையிலிருந்து அமாவாசை வரை வருகின்ற 15 நாட்களை கிருஷ்ண பட்சம், அதாவது, தேய்பிறை காலம் என்று அழைக்கிறோம்.
தேய்பிறை என்பது தேய வேண்டும். அதாவது நோய் விலக வேண்டும், தீர வேண்டும். அதற்காகத்தான் தேய்பிறை.
கடன் வாங்குவது, கடன் அடைப்பதற்கு தேய்பிறை நல்லது. விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறவும் தேய்பிறை நல்லது.
தேய்பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதனால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு.
நாள், நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்யும்பொழுது அவற்றின் தலைவனாகிய சந்திரன் வளர்பிறையாக அதாவது பலமுள்ளவனாக இருக்க வேண்டும். அதனால் தான் தேய்பிறையில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள்.