தமிழ் சினிமாவில் தயாராகும் திரைப்படங்கள் பட மாளிகையில் வெளியிடுவது தான் இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபாகயிருந்தது.
இன்று வரை நகரப் பகுதிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட திரைகளுடன் கூடிய திரைப்பட வளாகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு பட மாளிகை அனுபவத்தை முற்றிலும் நவீன தொழில்நுட்பத்துடன் அளித்துவருகின்றன.
அதேதருணத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக திரைப்படங்களை பட மாளிகையல்லாது கணினி திரைகளிலும் கைபேசியிலுள்ள டிஜிற்றல் திரைகளிலும் காணலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
அதிலும் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் தொற்று பரவல் அச்சம் காரணமாக பட மாளிகைகள் மூடப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் குறைவான பார்வையாளர்களுடன் இயங்குகிறது இந்நிலையில் டிஜிற்றல் தளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவதும் அதற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பதும் அறிமுகமாகியிருக்கிறது.
சூர்யா நடித்த சூரரைப்போற்று விஜய் சேதுபதி நடித்த க.பெ ரணசிங்கம் என பல படங்கள் டிஜிற்றல் தளத்திலும் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உலகின் ஏனைய சில பகுதிகளிலும் பொது முடக்க நிலை தொடர்வதால் மீண்டும் தமிழ் திரைப்படங்கள் டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது.
அந்த வகையில் சல்மான்கானின் ராதே சிவகார்த்திகேயனின் டாக்டர் தனுஷின் ஜகமே தந்திரம் நயன்தாராவின் நெற்றிக்கண் விஜய் சேதுபதியின் மாமனிதன் மற்றும் லாபம் ஆகிய படங்கள் அடுத்தடுத்த வரிசையாக டிஜிற்றல் தளங்களில் வெளியாகவிருக்கிறது.
இதனால் ரசிகர்களுக்கு தொடர்ந்து திரைப்படங்களுக்கு அளித்து வரும் ஆதரவு நீடிக்கும் என்றாலும் பட மளிகை அதிபர்கள் அதனை நம்பி இருக்கும் எஞ்சிய தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகிறதே என்ற கவலை திரையுலகினருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு பயணிப்பதே சிறந்தது என்கிறார்கள் பார்வையாளர்கள்.