வீர சிவாஜி மன்னரின் விருப்பத்தை நிறைவேற்றிய காஞ்சி மகான் – பூனேவிற்கு அருகில் தில்லை நடராஜர் திருக்கோயில் உருவான அற்புத நிகழ்வு பற்றி நாங்கள் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.
தில்லை நடராஜர் திருக்கோயில் உருவாக காரணமாக இருந்த சம்பவம்
அப்பொழுது 1980ஆம் ஆண்டு, மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த காஞ்சி மகாப்பெரியவர், பெருந்திரளென அடியவர்களும் உடன்வர, பூனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில், சத்தாரா (satara) மாநகரத்திலுள்ள சஜ்ஜன்கட் (sajjangad) கோட்டையில் அமைந்துள்ள சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தை தரிசித்துப் போற்றி மகிழ்கின்றார். சில தினங்கள் அங்கு தங்கியிருந்துப் புறப்பட்டுச் செல்லும் வழியில் திடீரென்று ஓரிடத்தில் சாலையோரமாக அமர்ந்து விடுகின்றார். அடியவர்களிடம் அருகிலுள்ள இல்லமொன்றின் அடையாளத்தைக் கூறி, அங்கு குறிப்பிட்ட அறையினுள் வைக்கப்பட்டிருக்கும் படத்தினைக் கேட்டுப் பெற்று வருமாறு கூறுகின்றார்.
அனைவருக்கும் பெரு வியப்பு, சுவாமிகள் கூறிய அடையாளத்தின் படி அமைந்திருந்த இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்தோரிடம் சுவாமிகள் வருகை தந்துள்ள விவரத்தையும், அவர்கள் இல்லத்திலுள்ள படத்தைப் பற்றியும் விவரிக்கின்றனர். அவர்களும், சகல மரியாதைகளுடன் சென்று காஞ்சி மகானைப் பணிந்துத் தங்களிடமிருந்த பெரியதொரு படத்தையும் சமர்ப்பிக்கின்றனர். சுவாமிகள் அதன் திரையை விலக்க, அது சத்ரபதி சிவாஜி மகராஜின் சித்திரம்.
காஞ்சிப் பெரியவர் நெகிழ்ச்சியுடன் அப்படத்திற்கு ஒரு சால்வையைப் போர்த்தி ‘இன்று நம் தேசத்தில் இந்து தர்மம் தழைத்தோங்கி இருப்பதற்கு, சமர்த்த ராமதாஸரின் பரிபூரணத் திருவருள் பெற்ற ‘வீர சிவாஜி’ எனும் இந்த மகானின் தன்னலமற்ற சேவையும், அளப்பரிய வீரமுமே காரணம்’ என்று போற்றுகின்றார்.
முன்பொரு சமயம் சிவாஜி மன்னர் தில்லையிலுள்ள நடராஜர் திருக்கோயிலைத் தரிசனம் செய்ய வந்திருந்த சமயத்தில், ‘இது போன்றதொரு அற்புத ஆலயம் நம் மாநிலத்தில் இல்லையே’ என்று பெரிதும் ஏங்கினாராம். அதனை நினைவு கூர்ந்த மகாப்பெரியவர், சிவாஜி மன்னரின் விருப்பத்தினை இச்சமயத்தில் நாம் பூர்த்தி செய்வோம், இவ்விடத்தில் ஒரு நடராஜர் திருக்கோயிலைப் புதுக்குவோம் என்று ஆசி கூறி அருள் புரிகின்றார்.
நான்கு வருடங்களில், நான்கு மாநில அரசுகளின் பங்களிப்போடு, ஒரு அற்புத நடராஜர் ஆலயம் அவ்விடத்தே உருவாகி 1984ஆம் குடமுழுக்கும் நன்முறையில் நடந்தேறுகின்றது. ஆத்தீக அன்பர்கள் அவசியம் சத்தாரா சென்று சமர்த்த ராமதாஸரின் பிருந்தாவனத்தையும், நடராஜப் பரம்பொருளின் ஆலயத்தையும் தரிசித்துப் போற்றுதல் வேண்டும்.
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்
பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்ந்து தினமும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பல நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.